பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

இருக்குமென்று சொல்ல இயலாது. ஆனால் இந்த மலைவாணர்களோ அன்பே உருவமானவர்கள்” என்று ஓர் அமைச்சர் சொன்னார்.

மன்னன் கூடாரத்துக்குவெளியே வந்து அங்கே நின்றிருந்த மக்களைக் கண்டான். அவர்கள் எத்தனை வகையான பண்டங்களைச் சுமந்துகொண்டு நின்றார்கள்! யானைத் தந்தத்தை ஒருவன் ஏந்தி நின்றான். வயிரம் பாய்ந்த அகிலின்கட்டு ஒன்றை ஒருவன் வைத்திருந்தான். சந்தனக் கட்டைகளும், சிந்துரக் கட்டியும், அரிதாரமும் சிலர் ஏந்தியிருந்தார்கள். கவரிமான் மயிரும் தேன் குடங்களும் சிலர் கொண்டு வந்திருந்தனர். ஏலக்காய்களும், மிளகுக் கொத்தும், கூவைக்கிழங்கின் மாவும், கவலைக் கிழங்கும் சிலர் கொணர்ந்திருந்தனர். தேங்காயைச் சிலர் சுமந்துவந்தனர். மாம்பழத்தைச் சிலர் கொணர்ந்தனர். சிலர் பலாப்பழங்களைத் தாங்கி வந்தனர். பச்சிலைமாலை, வெள்ளுள்ளிப் பூண்டு, பூங்கொடி, பாக்குக் குலை, வாழைக் குலை ஆகியவற்றைத் தாங்கி வந்தவர்கள் பலர். இவை யாவும் மரஞ்செடி கொடிகளிலிருந்து கிடைத்தவை.

வேறு சிலர் குட்டியான விலங்குகளைக் காணிக்கையாகக் கொண்டுவந்திருந்தார்கள். சிங்கக் குட்டியை ஒருவன் கொண்டுவந்திருந்தான். புலிக் குட்டி, யானைக் கன்று, குரங்குக் குட்டி, கரடிக் குட்டி, மலை யாட்டுக்குட்டி, மான் குட்டி, கத்தூரி மிருகக்குட்டி, கீரிப் பிள்ளை, புனுகுபூனை - இப்படிப் பல குட்டிகள் அங்கே இருந்தன. சிலர் மயிலைக்கொணர்ந்தனர். சிலர் காட்டுக் கோழியை வழங்கக் கொண்டுவந்திருந்தனர். கிளியைச் சிலர் தாங்கி நின்றனர்.