பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
5. சேரமான் தீர்மானம்

தன்முன் நின்ற மலைவாழும் மக்களைப் பார்த்து, “நீங்கள் யாதொரு குறைவும் இன்றி வாழ்கிறீர்களா?” என்று கேட்டான் அரசன்.

“மன்னர் பிரான் அருளால் எங்களுக்கு ஒரு குறைவும் இல்லை” என்று அவர்கள் ஒரே குரலாய்ச் சொன்னர்கள்.

அப்போது அந்தக் கூட்டத்தில் ஏதோ சிறு சலசலப்பு ஏற்பட்டது. சிலர் தங்களுக்குள் ஏதோ மெல்லப்பேசிக்கொண்டார்கள். எதையோ அரசனிடம் சொல்லத் தயங்குவதுபோல இருந்தது.

“வேறு ஏதாவது சொல்ல வேண்டியது உண்டா?” என்று செங்குட்டுவன் கேட்டான்.

அப்போது முதியவன் ஒருவன் முன்னே வந்து நின்று, “அரசர் பெருமானிடம் நாங்கள் கண்ட அற்புதக் காட்சி ஒன்றைச் சொல்ல வேண்டும். அதோ அங்குள்ள முருகனுக்குரிய மலையில் ஒரு வேங்கை மரத்தின் கீழே ஒரு பெண்மணி வந்து நின்றாள்” என்று சொல்லத் தொடங்கினான்.

அரசன் இடைமறித்து, “அதில் என்ன வியப்பு இருக்கிறது?” என்று கேட்டான்.

“அதைத்தான் சொல்ல வருகிறேன். அந்தப் பெண்மணி ஒற்றை மார்போடு மிக்க துயரமுடையவளாய் நின்றபோது, அவளுடைய கணவன் வானிலிருந்து வந்தான். அவனோடு அவள் வானகம் சென்று விட்டாள். தேவர்களெல்லாம் அவர்களைப் போற்றி