பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38

நிற்கமாட்டாமல் தோல்வியுற வேண்டியிருக்கும். உயிரையே இழந்துவிட நேரும்; இல்லையானால் துறவிகளாகி வீட்டையும் உறவினரையும் துறந்து வாழ வேண்டியதுதான். அரசர்பெருமான் சேனை அவனுடைய திருமேனிக்கு ஒப்பானது. அது வாழ்க!” என்று கூறி முரசை முழக்கினார்கள்.

இவ்வாறு முரசு அறையக் காரணமாக இருந்த கண்ணகியின் வரலாற்றைச் சாத்தனார் வாயிலாகக் கேட்டவர்கள், வஞ்சி மாநகர் வந்தவுடன் அந்த நகரில் உள்ளவர்களுக்கும் தனித்தனியே தெரிவித்தார்கள். அதனைக் கேட்ட நகர மாந்தர், “இப்படியும் இக்காலத்தில் நடக்குமோ? இது பெரிய அற்புதம்!” என்று கூறி வியப்படைந்தார்கள்.

“அப்படியானால், வஞ்சிமா நகரில் ஒரு பத்தினித் தெய்வத்தின் திருக்கோயில் எழப்போகிறது என்பது உறுதியாயிற்று. வெல்க நம் மன்னவன் வீரம்” என்று மக்கள் தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.