பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

அறிந்த கண்ணகி பத்தினியாகலின் துயரில் ஆழ்ந்து நேரே மன்னனிடம் போனாள். அவனிடம் நடந்ததைச் சொல்லி நிற்க, அவன் தன் உயிரை விட்டான். பின்பு மதுரை வீதியிற் சென்று தன் கற்புத் திறத்தால் மாநகரை எரியுண்ணச் செய்தாள். இக் குறவர்கள் சொன்ன பத்தினி அந்தப் பெருமாட்டியே!” என்று கூறி முடித்தார்.

கவனத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்த இளங்கோவடிகள், “ஊழ்வினை விளையும் காலம் என்றீர்களே; அது என்ன? உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்.

“நான் அதை அறிந்துகொண்டதும் ஓர் அற்புதந்தான். மதுரையில் இறைவன் எழுந்தருளியிருக்கும் வெள்ளியம்பலத்தில் நான் துயின்று கொண்டிருந்தேன். அப்போது இருள் செறிந்திருந்தது. ஏதோ பேச்சரவம் கேட்டது. நான் விழித்துக் கொண்டு கவனித்தேன். வீர பத்தினியாகிய கண்ணகியின் முன் மதுரை மாநகரின் காவல் தெய்வம் தோன்றி, ‘நீ மிக்க சினத்தால் இந்த நகரை எரியுண்ணச் செய்தாய். உங்களுக்கு இந்தத் துன்பம் விளைந்ததற்குக் காரணம் முன்பிறப்பில் ஒரு பெண் இட்ட சாபமே’ என்று கூறினாள்.”

“அந்தச் சாபத்துக்குக் காரணம் யாது? சாபம் என்ன? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லவேண்டும்” என்று இளங்கோவடிகள் மீட்டும் வினவினார்.

“நன்றாகத் தெரியும், மதுரைத் தெய்வம் சொல்லக் கேட்டதனால் எனக்கு அது தெரிந்தது. சொல்