பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை


ம்பெருங் காப்பியங்களில் ஒன்றாகிய சிலப்பதிகாரம் கண்ணகியின் கதையைச் சொல்வது. அதனை இயற்றியவர் இளங்கோவடிகள். காப்பியத்தின் மூன்றாம் பகுதியாகிய வஞ்சிக் காண்டக் கதையில் அவரே வருகிறார். அவர் சிலப்பதிகாரம் இயற்றப் புகுந்த கதையே இனிமையானது.

செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோயில் கட்டி அந்தப் பத்தினியின் திருவுருவைப் பிரதிட்டை செய்தான். அதனை அடுத்து இளங்கோவடிகள் இந்தக் காவியத்தை இயற்றினார். செங்குட்டுவன் அமைத்த கற்கோயில் இப்போது இருக்கிற இடம் தெரியவில்லை. ஆனால் இளங்கோவடிகள் இயற்றிய சொற் கோயிலாகிய சிலப்பதிகாரக் காப்பியம் இன்றும் மெருகழியாமல், அழகு குலையாமல் தமிழர்களுக்கு இலக்கிய விருந்தாய் நிலவுகிறது. இதனைத் தமிழுலகுக்கு முதல் முதலில் முழுமையாகக் கண்டுபிடித்து அச்சிட்டு உதவியவர்கள் மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள்.

செங்குட்டுவன் கற்கோயில் அமைத்த கதையும் இளங்கோவடிகள் சொற்கோயில் அமைத்த கதையும் தொடர்புடையவை. அந்த இரண்டையும் இணைத்து இந்தச் சிலம்பு பிறந்த கதையை எழுதினேன். சிலப்பதிகாரத்தில் பதிகத்திலும் கட்டுரை காதையிலும் உள்ள செய்திகளும், வஞ்சிக்காண்டம் முழுவதிலும் காணப்படும் வரலாறும், அடியார்க்கு நல்லார் உரையில் உள்ள சில குறிப்புகளும் இதை எழுத ஆதாரமாக இருந்தன.

“காந்தமலை”
கி. வா. ஜகந்நாதன்
சென்னை - 28
27-10-61