பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

பாராட்டினார்கள். இங்குள்ள மக்களின் பண்பு சிறப்பாக இருப்பதைப் போற்றினார்கள். வீரர்கள் பலர் இருப்பதை அறிந்து வியந்தார்கள். நம் படைகளையும் கண்டு, ‘எல்லா வகையிலும் நிறைந்த அரசு இது’ என்று சொன்னார்கள். ‘இப்படி வீரத்திலும் பண்பிலும் சிறந்துள்ள தமிழ் நாட்டு மன்னர்களின் பெருமையை வடக்கே உள்ள சிலர் உணர்வதில்லை. அந்தப் பேதைமையை அவர்கள் பேசும் பேச்சு வெளிப்படுத்துகிறது’ என்றார்கள். எதைக்கொண்டு இப்படிச் சொல்கிறீர்கள்?’ என்று கேட்டேன்.

“வடக்கே ஒரு நாட்டில் ஒரு பெரிய திருமணம் நிகழ்ந்ததாம். அதற்கு வடநாட்டு மன்னர்கள் பலரும் வந்திருந்தார்களாம். அப்போது ஒரு மன்னன், ‘தமிழ் நாட்டிலுள்ள சேர சோழ பாண்டியர்கள் தங்களுடைய அடையாளங்களாகிய வில்லையும் புலியையும் மீனையும் இமயமலையிலே பொறித்திருக்கிறார்களாம். இமயம் வரையிலும் தங்கள் வீரப் புகழ் பரவியிருக்கிற தென்று பெருமைப்பட்டுக் கொள்கிறார்கள்’ என்று சொன்னான். அதைக் கேட்டு அங்கே இருந்த கனகன், விசயன் என்ற இரண்டு வேந்தர்கள் எள்ளி நகையாடினர்களாம்; ‘அந்த மன்னர்கள் இங்கே வந்த போது எங்களைப் போன்ற மன்னர்கள் இங்கே இல்லை போலும்! இருந்தால் அப்படிச் செய்ய விட்டிருப்போமா?’ என்று கேட்டார்களாம். இந்தச் செய்தியை இமயத்திலிருந்து வந்தவர்கள் சொன்னார்கள்.

“தமிழ்நாட்டு மன்னர்களின் பெருமையைக் குறைத்துப் பேசிய அந்த இருவரும் நம் வீரத்தை உணர வேண்டாமா? அதற்கும் இந்த யாத்திரை உதவியாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.