பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

சேர்ந்துகொண்டு பயண முகூர்த்தத்தை நடத்தலானார்கள். ஐம்பெருங்குழு எண்பேராயம் என்னும் கூட்டத்தினரும், அரச கருமம் செய்யும் அதிகாரிகளும், கணக்குத் தொழில் புரிவோரும், அறங்காவல் செய்யும் பகுதியினரும், படையைச் சார்ந்த தலைவர்களும் சேர்ந்து, “அரசர் பெருமான் வாழ்க!” என்று வாழ்த்தினார்கள். பட்டத்து யானையின்மேல் அரசனது வாளையும் வெண்குடையையும் ஏற்றி, ஊருக்கு வெளியிலுள்ள மதிற்புறத்தே வடதிசையிலே போகச் செய்து நிறுத்தினார்கள்.

போர் செய்யப் புகும் அரசர்கள் பகைமன்னர் நாட்டை நோக்கிப் புறப்படுகையில் வஞ்சிமாலை சூடுவது தமிழ் நாட்டு வழக்கம். சேரன் செங்குட்டுவன் படை வீரர்களை யெல்லாம் அழைத்து யாவருக்கும் ஒருங்கே உணவு அளித்துத் தன் குலத்துக்குரிய பனை மாலையோடு வஞ்சி மாலையையும் தலையிற் சூட்டிக் கொண்டான்.

அரண்மனை வாயிலில் முரசு முழங்கியது. செங்குட்டுவன் சிவபக்தன். ஆதலின் சிவபிரானுடைய கோயிலுக்குச் சென்று வணங்கிப் பிரசாதம் பெற்றுத் தலையில் அணிந்துகொண்டு யானையின்மேல் ஏறினான். அப்போது திருமால் கோயிலிலிருந்து பிரசாதம் வந்தது. “வேந்தன் வெற்றி பெறுக!” என்று வாழ்த்தி அதை அரசனிடம் வழங்கினார்கள். சிவபெருமானுடைய நிர்மாலியப் பிரசாதத்தைத் தன் தலையில் அணிந்திருந்தமையால், திருமாலின் பிரசாத மாலையை வாங்கித் தன் தோளில் அவன் அணிந்து கொண்டான். யானை புறப்பட்டது. அங்கங்கே