பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

குதிரைகள் முகம் கவிழ்ந்து நிலத்தைக் கவ்வின. யானைகள் துதிக்கையை எடுத்து இடியைப் போலப் பிளிறிக்கொண்டு வீழ்ந்தன.

கனகவிசயர் தோல்வியுற்றார்கள். செங்குட்டுவன் அவர்களைச் சிறைப்படுத்தச் செய்தான். அவர்களோடு ஐம்பத்திரண்டு தேர் வீரர்கள் சிறைப்பட்டனர். மற்றவர்களில் உயிர்பிழைத்தவர்கள் ஆளுக்கு ஒருபுறமாக ஓட்டமெடுத்தனர். சிலர் துறவிகளைப்போல வேடம் பூண்டு போயினர். சிலர் சாம்பரைப் பூசிக்கொண்டு ஓடினர். சிலர் பாடுகிற பாணர்களைப்போலக் கோலம் புனைந்து தப்பிச் சென்றனர். சிலர் வாத்தியங்களைத் தோளில் மாட்டிக்கொண்டு ஓடினர். வேறு சிலர் கூத்தரைப்போல வேடம் அணிந்து சென்றார்கள். பாணர் முதலியவர்களைக் கொல்லுவது தகாது என்பது அக்காலத்தினர் கொள்கை. அதனால் அவர்கள் அத்தகையவர்களைப்போல உருமாறி, பெற்றோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டார்கள்.

வெற்றிபெற்ற செங்குட்டுவன் தன் பாசறையில் அமர்ந்து அமைச்சர்களையும் படைத் தலைவர்களையும் கூட்டி, மேலே செய்வதற்குரிய செயல்களைப்பற்றி ஆராய்ந்தான். "நாம் இனி யாதொரு தடையும் இன்றி இமயமலைக்குச் செல்லலாம். இங்கே நம்மைத் தடுத்து நிறுத்துவதற்கு வந்த மன்னர்கள் யாவரும் தோல்வியுற்றனர். ஆதலின் விரைவில் இமயம் செல்ல வேண்டியதுதான்” என்று சேரமான் தன் கருத்தைச் சொன்னான்.

அமைச்சன் ஒருவன், “மன்னர் பிரான் வரவேண்டுமென்பது இல்லையே! நாங்களே சென்று