பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61

கல்லை எடுத்து வந்துவிடலாம். தடையும் படையும் இருந்தால்தானே போர் எழும்? இப்போது அப்படி ஒன்றும் இல்லை. ஆதலின் அரசர் பெருமான் இங்கே இருந்து இளைப்பாறட்டும். எங்களுடன் ஒரு சிறு படை வந்தால் போதும் என்றான்.

அரசன் இந்த யோசனைக்கு இசைந்தான். ஆனால் பெரிய படை ஒன்று செல்லவேண்டும் என்று விரும்பினான். “ஒருகால் திடீரென்று யாரேனும் எதிர்த்தால் நாம் ஏமாந்துபோகக் கூடாதல்லவா?” என்று கேட்டான்.

கடைசியில் அமைச்சரில் ஒருவனாகிய வில்லவன் கோதையைத் தலைவனாகக் கொண்டு பல படை வீரர்கள் இமயமலையை நோக்கிச் சென்றார்கள். அவர்கள் புறப்படும்போது அரசனுக்கு, நீலகிரிக்கு அருகில் பாடி இறங்கியிருந்தபோது இமயத்திலிருந்து வந்த தவமுனிவர் சொன்னது நினைவுக்கு வந்தது. “இமயப் பகுதியில் வேதம் பாடும் அந்தணர் இருப்பார்கள். எப்போதும் அவியாதவாறு எரி ஓம்புவார்கள். அத்தகையவர்களிடம் பணிவாக நடந்து அவர்களைப் போற்றிப் பாதுகாக்க வேண்டும்” என்று வீரர்களிடம் சொல்லியனுப்பினான்.

அவர்கள் இமய மலையை அடைந்து ஓரிடத்தில் பெரிய உருவத்தை வடிக்கும் அளவுக்குக் கல்லை வெட்டி எடுத்தார்கள். அதை எடுத்து அரசன் இருக்கும் இடத்துக்குக் கொண்டுவந்தார்கள். நல்ல நாள் பார்த்து அதை விக்கிரகமாகச் செதுக்கும் வேலையைத் தொடங்கினார்கள். பத்தினிக் கடவுளின் வடிவம் சிற்பியின் உளியில் உருவாகி வந்தது.