பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

63

சோலையும் பொய்கையும் அமைத்தார்கள். இப்படிப் பல வகையிலும் அழகும் சிறப்பும் கொண்ட சிறிய நகரமாக அவ்விடத்தை ஆரிய மன்னர் சமைத்து விட்டார்கள். அந்தப் பாடியில் செங்குட்டுவன் தன் படைகளுடன் புகுந்தான்.

அங்கே சபை கூட்டிப் போரில் வீரம் பொலியப் போர் புரிந்த வீரர்களைப் பாராட்டிப் பரிசளிக்க எண்ணினான். அமைச்சரும் படைத்தலைவரும் வந்தனர். வீரர்கள் குழுமினார்கள். அரசன் உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்திருந்தான். முதலில் போரில் வீரத்துடன் பொருது உயிரை இழந்தவர்களுக்குச் சிறப்புச் செய்யத் தொடங்கினான். அவர்களுடைய மைந்தர்களை அழைத்து அவர்களுக்குப் பரிசு தருவதன் மூலமாக இறந்தவர்களுக்கு நன்றியறிவு காட்டலாம் என்பது அரசன் எண்ணம். ஆகவே அத்தகையவர்களை முதலில் அழைத்தான்.

போரில் இறந்து வீரசொர்க்கம் புகுந்தவர்களின் மைந்தர் வந்தனர்; தலையும் தோளும் துண்டிக்கப் பெற்று மடிந்தவர்களின் பிள்ளைகள் வந்தார்கள்; வாட்போர் செய்து மடிந்தவர் மக்களும், உறவினர் மடியத் தாமும் மடிந்தவர்களின் கான்முளைகளும் வந்தனர். அவர்களுக்கு வெற்றிச் சின்னமாகிய பொன்னாலாகிய வாகைப் பூவை அணியச் செய்தான் அரசன்.

பிறகு போரில் வீரங்காட்டி வெற்றி கொண்டவரை அழைத்தான். வாட்போரில் பகைவர்களை வீழ்த்திய மறவர் பரிசு பெற்றனர். தேர்வீரர்களோடு செய்த போரில் அவர்கள் தேரையும் அவர்களையும்