பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

"யார்மேலானாலும் சரி, கோபம் கொள்ளாமல் சற்றே அமைதிபெற்றுக் கேட்கவேண்டும். இந்த நாட்டைக் காக்கும் பெரிய பொறுப்பைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு ஐம்பது ஆண்டுகள் ஆயின. இது வரைக்கும் பல போர்க்களங்களைக் கண்டுவிட்டீர்கள். பலரை முதுகுகாட்டி ஓடச் செய்தீர்கள். போர்க் களத்தில் பகைவர் படையைக் கொன்று குவித்தீர்கள். வீரத்தைக் காட்டினீர்கள். ஈரத்தைக் காட்டி நல்ல காரியங்களைச் செய்யத் தங்களுக்கு ஒய்வு இல்லாமற் போயிற்று. இனிமேலாவது செய்ய வேண்டாமா?” என்று கூறிச் சற்றே நிறுத்தினான் மாடலன்.

“அரசகுலத்தில் பிறந்தவர்கள் வீரச்செயல்களைப் புரிந்து பகைவர்களை வெல்வது வழக்கந்தானே?” என்று செங்குட்டுவன் கேட்டான்.

“அது உண்மைதான். ஆனால் அதையன்றி வேறு காரியங்களும் அவர்கள் செய்வதுண்டு. நாம் எப்போதும் இப்படியே இருப்போம் என்று எண்ணுவது அறிவுடையோர்களுக்கு அழகுஅன்று. இதற்கு முன் தங்கள் மரபில் பல பெரிய வீரச் செயல்களைப் புரிந்த மன்னர்கள் இருந்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய திறலுடையவர்களாக இருந்தால் என்ன? எல்லாரும் மாய்ந்து ஒழிந்தனர்; ஒருவரேனும் இப்போது இல்லை. காரணம் என்ன? இந்த யாக்கை நிலையாதது. எப்போது பிறந்தோமோ, அப்போது இறப்பும் நிச்சயமாக நமக்கு உண்டு என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும்.

“உடம்போடு வாழும்போது வளவாழுகிறோம். செல்வத்தை ஈட்டி வாழ்கிறோம். அந்தச்