பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

தில் புகுந்து வேலை செய்யத் தொடங்கின. அவன் மாடலனுடைய முகத்தை ஏறிட்டுப் பார்த்தான்.

“எல்லோரும் உண்ணுகிறார்கள்; உறங்குகிறார்கள்; செத்துப்போகிறார்கள்; மறுபடியும் ஏதாவது ஒரு பிறவியை எடுக்கிறார்கள். அத்தகைய நிலை தங்களுக்கு வரக்கூடாதென்பது என் ஆவல். இனி, போர்க்களத்தில் வென்று வெற்றியைநிலைநாட்டும் கருத்தை மறந்து விட்டு அறநெறிக்குரிய வேள்விகளைச் செய்யவேண்டும். இராசசூய யாகம் செய்தல் நல்லது. அதை இப்போதே செய்யவேண்டும். நாளைக்குச் செய்யலாம் என்றால், நாம் எவ்வளவு நாள் உயிரோடு இருப்போம் என்ற உறுதி நமக்கு இல்லை. ஆகையால் தங்கள் வாழ்க்கைத் துணைவியாகிய அரசியாரோடு இருந்து பெருவேள்வி செய்து நீடுழி வாழவேண்டும்” என்று சொல்லித் தன் நல்லுரையை முடித்தான் மாடலன்.

அவனுடைய நயமான மொழிகள் செங்குட்டுவனுடைய உள்ளத்தில் மெல்ல மெல்லப் புகுந்தன. சேர அரசனும் அறிவுடையவனாதலால் அந்தணன் கூறியவை தனக்கு நலம் செய்வன என்பதை நன்கு உணர்ந்தான்.

பின்பு ஒரு நல்ல நாளில் வேள்விச் சாந்தி செய்வதற்கு ஏற்ற மறையவர்களையும் மற்றத் துணைவர்களையும் அழைத்துவரச் செய்தான். மாடலன் சொல்லிய முறையில் பெருவேள்வியை நடத்துவதற்கு ஆவன செய்யும்படி ஏவினான். சிறையில் வைத்திருந்த இரண்டு வடநாட்டரசர்களையும் பிறரையும் விடுதலை செய்து வஞ்சிமாநகர்ப்புறத்தில் தங்கியிருக்கச் செய்தான்.