பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

81

அங்கே இருந்த மகளிர் யாவரும் கண்ணகியைப் புகழ்ந்து பாடத் தொடங்கினார்கள். தரிசனம் செய்ய வந்தவர்கள் எல்லாம் வியப்பிலே மூழ்கினார்கள், கண்ணகி தெய்வம் என்பது முக்காலும் உண்மை. பாண்டியன் செய்த தீங்கினால் அவள் கணவனை இழந்தாள் என்று உலகம் சொல்கிறது. தன் பேரருளால் அதை மறந்தல்லவா இந்தத் தெய்வமங்கை பேசுகிறாள்? நாமெல்லாம் இந்தத் தெய்வத்தை நம்முடைய சேரமான் உருவாக்கினமையால் எங்கள் அரசனுடைய மகள் என்று சொல்கிறோம். ஆனால் இவளோ தான் பாண்டியன் மகள் என்றல்லவா சொல்கிறாள்? நாம் சேரமானை வாழ்த்திக்கொண்டிருக்க, இந்தப் பிராட்டியோ பாண்டியனை வாழ்த்துகிறாள்! என்ன அருள்!” என்று சொல்லிச் சொல்லி அதிசயித்தார்கள்.

பெண்கள் சோழனையும் பாண்டியனையும் சேரனையும் பாடி வாழ்த்தினார்கள். கண்ணகியின் பெருமையைப் பாடிப் பாடி மகிழ்ந்தார்கள்.

கடவுள் மங்கலம் நிறைவேறியது. கண்ணகி தெய்வத்தன்மையுடன் அந்தக் கோயிலில் எழுந்தருளி நலம் செய்வாள் என்று யாவரும் நம்பி வணங்கினர். அரசன், திருக்கோயிலில் நாள்தோறும் நடக்கவேண்டிய பூசைக்கும் அவ்வப்போது சிறப்பாக நடக்கவேண்டிய விழாக்களுக்கும் உரிய நிபந்தங்களை அமைத்தான். “இந்தப் பெருமாட்டிக்குரிய பூசனையை நீயே செய்வாயாக!” என்று தேவந்தியைப் பணித்தான்.

கோயிலை வலமாக மும்முறை வந்து சேர அரசன் பத்தினித் தெய்வத்தை வணங்கினான். பிறகு அங்கே வந்திருந்த வேறு மன்னர்களும் பணிந்து வணங்கி

சி-6