பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

85

என்றும் இல்லாத மனநிறைவு உண்டாயிற்று. இடையே சில முறை சாத்தனார் வந்து சென்றார். “காவியம் முடிந்த பிறகு வந்து வழக்கம் போல் சில நாள் தங்குகிறேன்” என்று சொல்லி அவர் போய் விட்டார்.

சிலப்பதிகாரத்தை இயற்றும் வாய்ப்புத் தமக்குக் கிடைக்கவில்லையே என்று சாத்தனார் முதலில் எண்ணினார். பிறகு மாதவியின் மகளாகிய மணிமேகலையின் வரலாற்றை இயற்றத் தொடங்கினார். அதனால் அடிக்கடி வஞ்சிமாநகர் வருவதற்கு அவரால் இயலவில்லை. அவர் மணிமேகலை என்னும் காவியத்தை எழுதி முடித்துவிட்டார். ‘எப்படியாவது ஒரு காவியம் செய்துவிட வேண்டும்’ என்ற வீறு அவருக்கு இருந்தது. அதனால் அதை முழுமூச்சாக இருந்து முடித்தார்.

இளங்கோவடிகள் சிந்தனை செய்து செய்து மெருகேற்றிக் காவியத்தை நிறைவேற்றினார். சாத்தனார் மதுரையிலிருந்து வந்தார். அவர் தாம் இயற்றி முடித்திருந்த மணிமேகலை என்னும் காவியத்தைக் கொண்டுவந்திருந்தார். அவர் இளங்கோவடிகளிடம் வந்தார். அடிகள், “இரண்டு நாட்களுக்கு முன்தான் சிலப்பதிகாரத்தை இயற்றி முடித்தேன். உங்களுக்குச் சொல்லியனுப்பவேண்டும் என்று நினைத்தேன். நீங்களே வந்து விட்டீர்கள்!” என்று மகிழ்ச்சியுடன் கூறி, அவரை வரவேற்றார்.

அப்போதுதான் சாத்தனர், “நானும் ஒரு காவியம் செய்திருக்கிறேன். மணிமேகலையின் கதையைச் சொல்வது அது” என்று சொன்னார்.