பக்கம்:சிலம்பு பிறந்த கதை.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

மகிழ்ந்தார்கள். திருமால் அன்பர்கள் ஆய்ச்சியர் குரவையில் உள்ள துதிப்பாடல்களைப் பாடி உருகினார்கள். முருக பக்தர்கள் குன்றக் குரவையில் வரும் வாழ்த்துக்களை இசையுடன் பாடி இன்புற்றார்கள். மகளிர் வரிப்பாடல்களைப் பாடி விளையாடினார்கள்.

இவ்வாறு சுவைப்பிழம்பாக இருக்கும் சிலப்பதிகாரம் தமிழர்களுடைய நெஞ்சை அள்ளுவதாக அமைந்து விட்டது. “தமிழ்த் தாயின் திருவடிகளுக்கு இளங்கோவடிகள் அணிந்த சிலம்பு இது” என்று சிலர் பாராட்டினர். “இயல், இசை, நாடகம் என்ற மூன்றும் அமைந்த முத்தமிழ்க் காப்பியம் இது” என்று சிலர் புகழ்ந்தார்கள். “மூன்று மன்னர்களையும் மூன்று நாடுகளையும் பாடும் தமிழ் நாட்டு வரலாற்றுப் பனுவல்” என்று சிலர் கூறினர். “சேரமன்னனாகிய செங்குட்டுவன் பத்தினித் தெய்வத்துக்கு அழகிய கற்கோயிலைக் கட்டினான்; அவனுடைய தம்பியாகிய இளங்கோவடிகளோ மிகமிக அழகான சொற்கோயிலைக் கட்டினார்” என்றார் ஒரு புலவர். “செங்குட்டுவன் கட்டிய கற்கோயிலைப் பார்க்க வேண்டுமானால் இந்த நகரத்துக்கு வந்துதான் காணவேண்டும்; அதற்கு இட எல்லை உண்டு. ஆனால் இளங்கோவடிகள் அமைத்த சொற்கோயிலோ எவ்விடங்களுக்கும் சென்று இன்பந் தருவது. அதனால் இது சிறந்தது” என்றார் மற்றொரு புலவர்.

சிலப்பதிகாரம் இன்றளவும் நிலைபெற்றுச் செந்தமிழ் நாட்டில் சிறந்த காவியமாய் நிலவுகிறது. ஐம்பெருங்காப்பியங்கள் என்று சொல்லும் வரிசையில் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி என்று ஐந்து காவியங்கள்