பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. சிலம்பில் போர்கள்

சிலப்பதிகாரத்தில் இடம் பெற்றுள்ள போர்கள் சில, பல தலைப்புகளில் அங்கும் இங்குமாகக் குறிப்பிடப் பட்டிருப்பினும், அவற்றையெல்லாம் தொகுத்து இந்தத் தலைப்பின் கீழ்க் காணலாம்.

முசுகுந்தச்சோழன் அரக்கரோடு போர்செய்தான். தொடித்தோள் செம்பியன் வானில் தூங்கு எயில் எறிந்தான்.

கரிகால் சோழன் வடக்கே படையெடுத்துச் சென்று வடவரை வென்று இமயத்தைச் செண்டால் அடித்துப் புலிக்கொடி நாட்டி வந்தான்.

பாண்டியன் நெடுஞ்செழியன் தலையாலங்கானம் என்னும் இடத்தில் தன் இளம் பருவத்திலேயே பகைவர் எழுவரை வென்றான். ஆரிய ப் ப டை கடந்த நெடுஞ்செழியன் இமயமும் கங்கையும் வென்றான்.

ஒரு சேரன் கடலிலே பகைவரின் கடம்பு எறிந்து வென்றான்.

பொற்கைப் பாண்டியன் இந்திரன் முடிமீது வளை என்னும் படைக்கலத்தை எறிந்து தகர்த்தான்.

இமய வரம்பன் நெடுஞ்சேரலாதன் வடக்கே இமயம் வரை படையெடுத்துச் சென்று வென்று 'இமயவரம்பன்' என்னும் சிறப்புப்பெயர் பெற்று ஒரு மொழி வைத்து நாவலந் தீவு (இந்தியா) முழுமையும் ஆண்டான்.