பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

13. வாணிகம்

உள்ளுருக்குள்ளேயோ வெளியூருக்குள்ளேயோ - உள் நாட்டுடனேயோ வெளிநாட்டுடனேயோ வாணிகம் இன்றி மக்களினம் வாழ முடியாது. எல்லாராலும் எல்லாப் பொருள்களும் உண்டாக்க வியலாது. ஒவ்வொருவரும் உண்டாக்கிய பொருள்களை ஒருவர்க் கொருவர் 'பண்ட மாற்று' செய்து கொண்டனர் பழங்காலத்தில்.

பின்னர்ப் பண்ட மாற்று படிப்படியாகப் பல உருவம் பெற்றுவர, இறுதியில் இன்றுள்ள வணிக முறை தோன்ற லாயிற்று. சங்க காலத்திலும் அதைச் சார்ந்த காலத்திலும், உள்நாட்டில் காலால் நடந்து எடுத்து வந்தும் வண்டிகளில் ஏற்றி வந்தும் பொருள்கள் பண்டமாற்று செய்யப்பட்ட தல்லாமல், பிறநாடுகளிலிருந்து நீர் வழியாகக் கப்பல்கள் வாயிலாகவும் பொருள்கள் கொண்டு வந்து தரப்பெற்று மாற்றாக வேறு பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன.

மனையறம் படுத்த காதை

பண்டைக் காலத்தில் சோழர்களின் தலை நகராகிய புகார் ஒரு பெரிய வாணிகக் களமாக (சந்தையாக) விளங்கிற்று. புதிய புதிய நாடுகளிலிருந்து பல்வேறு பண்டங்கள் கால் வழியாகவும், கப்பல் வழியாகவும் கொண்டுவரப் பெற்றுப் புகாரில் ஒருங்கு குவிக்கப் பட்டிருந்தனவாம். இது சிலம்பு - மனையறம் படுத்த காதையில்,

"அரும்பொருள் தரூஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கன்ன உடைப்பெரும் பண்டம்
கலத்தினும் காலினும் தருவன ரீட்ட.."
(5-7)