பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

111



"வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப்
பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும்,
சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம்
சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின்
பொலந்தெரி மாக்கள் கலங்குஅஞர் ஒழித்தாங்கு
இலங்குகொடி எடுக்கும் கலங்கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழைநூல் பட்டினும்
பால்வகை தெரியாப் பன்னூறு அடுக்கத்து
நறுமடி செறிந்த அறுவை வீதியும்,
நிறைக்கோல் துலாத்தர் பறைக்கண் பராரையர்
அம்பண அளவையர் எங்கனும் திரிதரக்
காலம் அன்றியும் கருங்கறி முடையொடு
கூலம் குவித்த கூல வீதியும்.."
(199-211)

என்பது பாடல் பகுதி. ஒன்பது மணிகளின் இயல்பை ஆராய்ந்து அறிபவர் இருக்கும் கடைத் தெருவில் பகைவர் வருவார் என்ற அச்சமே இல்லையாம். அவ்வளவு காவல் உள்ள பகுதி அது.

சாதரூபம், கிளிச்சிறை, ஆடகம், சாம்பூந்தம் என்னும் நால்வகையான பொன் கட்டிகளை விற்பவர், கொடி கட்டி விளம்பரம் செய்து விற்பராம்.

இந்தக் காதையில், ஒன்பது மணிகளின் இயல்புகளும் அவற்றை ஆராய்ந்து காணுவோரின் பொருளறிவும் விளக்கப்பட்டுள்ளன. மதுரை பற்றிய தலைப்பில் வாணிகம் பற்றி இன்னும் விரிவாகக் காணலாம்.

பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நடைபெற்ற வாணிக வளத்தை நோக்கின் பெரு வியப்பு தோன்றுகிறது.