பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சுந்தர சண்முகனார்


வைப்பர். பாண்டியன் நெடுஞ்செழியன், நாடக மகளிரின் ஆடல் பாடல்களில் ஈடுபட்டு அவர்களால் உள்ளங் கவரப் பட்டுள்ளான் எனக் கோப்பெருந்தேவி அவன்மேல் ஊடல் கொண்டாள். ஆனால், அந்த ஊடலை வெளிக்காட்டாமல், தனக்குத் தலையை நோவதால் என்னவோபோல் இருக்கிறேன் என்று சொன்னாளாம். மக்களிடையே இது போன்ற பழக்கம் உண்டு தானே! அலுவலகத்திற்கு விடுமுறை எடுக்கும் காரணப் பட்டியலில் தலை நோவும் ஒன்றல்லவா? இதை அரசியும் பின்பற்றியுள்ளாள். பாடல்:

"கூடல் மகளிர் ஆடல் தோற்றமும்
பாடல் பகுதியும் பண்ணின் பயங்களும்
காவலன் உள்ளம் கவர்ந்தன என்றுதன்
ஊடல் உள்ளம் உள்கரந்து ஒளித்துத்
தலைநோய் வருத்தம் தன்மேல் இட்டுக்

குலமுதல் தேவி கூடாது ஏக"
(6.131-136)

தெய்வத்திற்குப்பலியிடல் அன்றே இருந்தது. பத்தினிப் பெண்டிரை வணங்குதல் முதலாகப் பல்வேறு தெய்வ வணக்கம் அன்றே இருந்தது. சமணமும் புத்தமும் பெருவாரியாகப் பின்பற்றப் பட்டன.

ஊழ்வினை நம்பிக்கையும் பழம் பிறவி நம்பிக்கையும் நிரம்ப இருந்தன என்பது வேறு தலைப்பில் விரிவாக விளக்கப் பட்டுள்ளன. பூதம். பேய் பிசாசு நம்பிக்கையும் உண்டு. தியன செய்பவரைப் பூதம் அறைந்து உண்ணும் நம்பிக்கையும் இருந்தது. "பூதம் புடைத்து உணும் பூத சதுக்கமும்" (5:134) என்பது பாடல் பகுதி.

பரத்தமைத் தொழில் அன்றே இருந்தது. விழாக் காலங்களில் ஆடவரும் மகளிரும் இன்பத்துடன் திரிந்து பொழுது போக்குவராம்.