பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

122

சுந்தர சண்முகனார்



தண்ணீர் தெளித்துத் தன்கையால் தடவி (16:41)
அரசர் பின்னோர்க்கு அருமறை மருங்கின்
உரிய மருங்கின் ஒருமுறை கழித்து..." (16:44, 45)

பெண்கள் மேல் தெய்வம் ஏறி (சாமியாடி) ஏதேதோ கூறுவது உண்டு. வேட்டுவர் குடியில் இறை பூசனை செய்யும் சாலினி என்பவள் மீது தெய்வம் ஏறிய செய்தி வேட்டுவ வரியில் கூறப்பட்டுள்ளது.

"பழங்கடன் உற்ற முழங்குவாய்ச் சாலினி
தெய்வ முற்று மெய்ம்மலர் நிறுத்து. (12:7, 8)
நடுவூர் மன்றத்து அடிபெயர்த்து ஆடி" (12:11)

மற்றும் தேவந்தி மீது பாசண்டச் சாத்தன் என்னும் தெய்வம் ஏறிப் பேசியதாக வரந்தரு காதையில் சொல்லப் பட்டுள்ளது.

"தெய்வம் உற்றெழுந்த தேவந்திகைதான்
கொய்தளிர்க் குறிஞ்சிக் கோமான் தன்முன் (30:45, 46)
பாசண்டன் யான் பார்ப்பனி தன்மேல்
வந்தேன் என்றலும்" (30:69, 70)

இது பாசண்டச் சாத்தன் தேவந்தி மீது ஏறிச் செங்குட்டுவனிடம் சில சொல்லிய பகுதி. மற்றும், தேவந்தி மேல் கண்ணகி ஏறி இளங்கோ அடிகட்குச் சில கூறியதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

"தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி"
(30.172)

கண்ணகி தேவந்தியின் வாயால் பல கூறியதாக இந்தப் பகுதியில் ஒரு செய்தி உள்ளது.

இவ்வாறு தெய்வம் ஏறிச் சாமியாடிக் குறி சொல்லும் செயல் இக்காலத்திலும் தொடர்கின்றது. சாமியாடுபவளிடம் பலர் குறி கேட்பார்கள்; சாமியாடுபவள் தன் மனம்போன போக்கில் ஏதேதோ கூறுவாள். அன்பர்கள் கேட்கும்