பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

1. மூவேந்தர் காப்பியம்

மன்னராட்சி நடைபெற்ற பண்டைக் காலத்தில் மன்னர்கள் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டனர். குடியரசாட்சி புரியும் இருபதாம் நூற்றாண்டிலும் போருக்குக் குறைவில்லை. நாட்டுத் தலைவர்களின் தூண்டுதலால் நாடுகள் ஒன்றோடொன்று போரிடுகின்றன. போரூக்கம் என்னும் இயல்பூக்கம் எல்லாருக்கும் உண்டெனினும் அதை அமைதி (Sublimation) செய்து திசை திருப்பி வெல்வதற்கு உரிய பொறுப்பு பெரும்பாலும் அரசுத் தலைவர்களிடம் இருப்பதாகத் தோன்றவில்லை.

குறிப்பாகத் தமிழகத்தை எடுத்துக் கொள்ளினும் பண்டைக் காலத்தில் சோழர், பாண்டியர், சேரர் என்னும் முடியுடை மூவேந்தர்களும் அவர்களைச் சார்ந்த அல்லது சாராத சிற்றரசர்களும் குறுநில மன்னர்களும் இடைவிடாது தொடர்ந்து ஒருவரோடொருவர் போரிட்டுக் கொண்டனர். வரலாறு என்னும் தலைப்பில் உலகில் எழுதப்பட்டுள்ள நூல்களைப் படிக்கின், பெரும்பாலும் போர்களைப் பற்றிய செய்திகளே இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

பண்டு தமிழகத்தில் ஒளவையார் போன்ற புலவர்கள் சிலர் வேந்தர்களிடையே தூது சென்று அமைதி காக்கப் பாடுபட்டதாகத் தெரிகிறது. புலவர்கள் சிலர் தம்மை ஆதரித்த மன்னர்களைப் போற்றிப் புகழ்ந்த பாடல்களைக் காண்கிறோம். சேர - பாண்டிய - சோழர் ஆகிய முடியுடை மூவேந்தர்களையும் ஒத்த நோக்கில் காணும் உயரிய ஒருமைப்பாட்டுப் புலவர் ஒருவர் இருந்தார் எனில், அவர் சிலப்பதிகாரம் பாடிய இளங்கோவடிகளே என்று கூறலாம்,