பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

சுந்தர சண்முகனார்


களின் வரலாறுகளைக் கிளறிப் பார்க்கின் உண்மை விளங்கும். திருவள்ளுவரின் மனைவிதான் மாரியம்மன் ஆனாள் என்பது ஒரு கதை. பிருகு முனிவரின் மனைவி நாகவல்லி என்பவளே மாரியம்மன் ஆனாள் - சமதக்கினி முனிவரின் மனைவி இரேணுகாதேவியே மாரியம்மன் ஆனாள் - என்பன கதைகள். இரேணுகாவின் மகன் பரசுராமன், தாய் செய்த ஒரு பெருங்குற்றம் பற்றி, அவளைத் தலை வேறாகவும் உடல் வேறாகவும் வெட்டி விட்டானாம். எனவேதான், சில இடங்களில் கழுத்தை மட்டும் வைத்து வழிபடுகின்றனர். கழுத்து மாரியம்மன் தோன்றிய வரலாறுகளுள் இஃதும் ஒன்று. ஐவர்க்கும் தேவி அழியாத பத்தினியாகிய துரோபதையின் வரலாற்றைச் சொல்ல வேண்டியதில்லை.

இதுகாறும் கூறியவற்றால், பத்தினி தெய்வமாகிய கண்ணகி கோயில் எடுத்து வழிபடப்பட்டாள் என்னும் உண்மையை ஐயமின்றி ஒத்துக் கொள்ளலாம். சிலப்பதிகாரக் காலத்தில் இந்த மரபு தொடங்கப்பட்டது.

இப்போது, மதுரை மாவட்ட எல்லையின் அண்மையில் உள்ள மங்களதேவி கோயில் என்னும் கோயில் கேரள அரசின் எல்லைக்குள் உள்ளது. அந்தப் பகுதியைத் தமிழ் நாட்டுக்கு அளிக்குமாறு தமிழ்நாடு அரசு கேரள அரசைக் கேட்டுக் கொண்டிருப்பதைச் செய்தித்தாள் படிப்பவர்கள் அறிவர். மங்களதேவி கோயில் எனப்படுவதுதான் கண்ணகி கோயில் எனப்படுகிறது. மங்கல மடந்தை கோட்டம் (30:88) என்று சிலம்பில் கூறப்பட்டுள்ளது.

தாலி கட்டுதல்

மணமகன் மணமகளின் கழுத்தில் தாலி கட்டியது சிலப்பதிகாரக் காலத்தில் உண்டா - இல்லையா - என்பது ஒரு கேள்விக் குறி.