பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

சுந்தர சண்முகனார்


அடிகள் தமது நூலை, (சோழர்க்கு உரிய) புகார்க் காண்டம், (பாண்டியர்க்கு உரிய) மதுரைக் காண்டம், (சேரர்க்கு உரிய) வஞ்சிக் காண்டம் என முப்பெருங் காண்டங்களாகப் பகுத்து அமைத்துள்ளமையால், அவரது நூலாகிய சிலப்பதிகாரம் மூவேந்தர் காப்பியம் என்னும் பெருமையுடைத்து. இதற்கு இன்னும் சான்றுகள் பல உள.

வேனில் காதை

வேனில் காதையில் இளவேனில் காலம் வந்தது பற்றி ஆசிரியர் கூறுகிறார். வடக்கே திருவேங்கடமும் தெற்கே குமரியும் எல்லையாக உள்ள தமிழகத்தில், மதுரை, உறந்தை, வஞ்சி, புகார் ஆகிய இடங்களில் அரசு செய்கின்ற மன்மதனின் துணை யாகிய இளவேனில் வந்தது என்று பாடியுள்ளார்:

“நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம் பறுத்த தண் புனல் நன்னாட்டு
மாட மதுரையும் பீடார் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசு வீற்றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ் துணை யாகிய
இன்னிள வேனில் வந்தனன்”
(1—7)

என்பது பாடல் பகுதி. இளவேனில் காலம் வந்தது என்று சொல்ல வந்த இடத்தில், மூவேந்தர்களின் தலைநகர்களைப் பற்றிக் குறிப்பிட வேண்டிய தேவையே இல்லை. அப்படியிருந்தும், பாண்டியர்க்கு உரிய மதுரையையும், சோழர்க்கு உரிய உறந்தையையும் புகாரையும், சேரர்க்கு உரிய வஞ்சியையும் குறிப்பிட்டுள்ளார். அதாவது, தமது ஒருமைப் பாட்டு உணர்ச்சியை வெளிப்படுத்தற்கு இந்த இடத்தை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் ஆசிரியர்.