பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

சுந்தர சண்முகனார்



நிலம் திரிதல்

வேனில் (வெயில்) காலத்தோடு ஞாயிற்றின் கொடிய வெப்பமும் சேர்ந்து கொண்டதால், முல்லை நிலமும் குறிஞ்சி நிலமும் தம் நிலை மாறிப் பாலைவனமாக மாறினவாம். இதற்குப் பொருத்தமான உவமை தரப் பட்டுள்ளது. அமைச்சர் முதலான துணைவர்களோடு அரசனும் முறைமாறி நடக்க, நல்ல அரசியல் இன்மையால் வருந்தும் நாட்டைப்போல நிலம் திரிந்ததாம்.

"கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியனிலம் போல
வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன்
தானலம் திருகத் தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து
நல்லியல் பழிந்து கடுங்குதுயர் உறுத்துப்
பாலை என்பதோர் படிவங் கொள்ளும்"
(11:60:66)

கோத்தொழிலாளர் = அமைச்சர் முதலான அரச வினைஞர்கள். வேனலம் கிழவன் = வேனில் காலம் கிழவன் என உருவகிக்கப்பட்டுள்ளது. கோத் தொழிலாளர் போன்றது வேனில். வெங்கதிர் வேந்தனாகிய ஞாயிறு அரசனுக்கு ஒப்புமை.

புறஞ்சேரி இறுத்த காதை

கோசிகன் வெயிலால் வாடிய மாதவிக் கொடியைப் பார்த்து, கோவலன். பிரிந்ததால் கொடுந்துன்பம் அடைந்த மடந்தையாகிய மாதவி போல நீயும் வருந்தினையோ - என்றான்.

"கோவலன் பிரியக் கொடுந்துயர் எய்திய
மாமலர் கெடுங்கண் மாதவி போன்றுஇவ்
அருந்திறல் வேனிற் கலர்களைக் துடனே
வருந்தினை போலும் நீ மாதவி"
(13:48-51)