பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சிலம்போ சிலம்பு

11


நெடியோன் = திருமால். தொடியோள் = தொடி யணிந்த குமரி. கடல் என்னும் பொருள் உடைய ‘பெளவம்’ என்பது, கிழக்கு எல்லை மேற்கு எல்லைகள் போல் தெற்கு எல்லையும் கடலே என்பதை அறிவிக்கிறது. குமரிக் கோடு கொடுங்கடல் கொண்டதை, இந்த இடத்திலே உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.

யாப்பமைதி

இளங்கோவின் யாப்பமைதி ஒன்று இங்கே கவனிக்கத்தக்கது. முதல் சீருக்குச் சிறப்பாக மூன்றாம் சீரிலே அல்லது நான்காம் சீரிலே மோனை யமைப்பார் - அவ்வாறு மோனை யமைக்காவிடின் எதுகை அமைத்து விடுவார். மேலே தந்துள்ள பாடல் பகுதியை நோக்கின் இது புலனாகும். நெடியோன் - தொடியோள் - எதுகை. தமிழ் - தண் - மோனை. மாட - பீடார் - எதுகை. கலி - ஒலி - எதுகை அரைசு - உரைசால் - எதுகை. மன்னன் - மகிழ் - மோனை. இவ்வாறே மற்ற இடங்களிலும் கண்டு கொள்ளலாம்.

நடுகல் காதை

கண்ணகி மூவேந்தர் வாயிலாக மூன்று படிப்பினைகளை அளித்தாளாம். அரசர் செங்கோல் வழுவாது ஆண்டால் தான் பெண்களின் கற்பு சிறக்கும் என்பதைச் சோழன் வாயிலாக அறிவித்தாளம் செங்கோல் வழுவினால் நேரிய மன்னர்கள் உயிர் வாழமாட்டார்கள் என்பதைப் பாண்டியன் வாயிலாகத் தெரிவித்தாளாம். மன்னர்கள் தாம் சொன்ன சூளுரையை முடித்தாலன்றிச் சினம் நீங்கார் - முடித்தே தீர்வார் என்பதை, வடவரை வென்ற சேரன் செங்குட்டுவன் வாயிலாகப் புலப்படுத்தினாளாம். பாடல்:

“அருந்திறல் அரசர் முறை செயின் அல்லது

பெரும் பெயர்ப் பெண்டிர்க்குக் கற்புச் சிறவாதெனப்