பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

154

சுந்தர சண்முகனார்



படிக்காத மக்களும் தமது பேச்சினிடையே கையாளும் மக்கள் கலையாகிய உவமை உருவகங்கள், இலக்கியங்கட்கு இன்றியமையாத அணிகலன்களாகும். சில இலக்கியங்கள், அவற்றில் உள்ள உவமை உருவகங்களால் பெருமதிப்பு பெறுவதும் உண்டு. உவமைகளை மிகுதியாகக் கையாண்டு இருப்பதால் ‘உவமைக் கவிஞர்’ என்ற பட்டம் பெறுபவரும் உளர்.

இத்தனை உவமைகளைப் புகுத்த வேண்டும் எனத் திட்டமிட்டு வலிந்து புகுத்துபவர்கள் உயர்வுபெற இயலாது. கருத்தோட்டத்தின் ஊடே உவமைகள் இயற்கையாக இழையோடிச் சுவையளிக்க வேண்டும். இளங்கோ இயற்கையாகத் தேவையான இடங்களில் தேவையான அளவு கையாண்டு காப்பியத்தை அணி செய்துள்ளார்.