பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

சுந்தர சண்முகனார்



“உழவர் ஓதை மதகோதை
உடைநீர் ஓதை தண்பதங்கொள்
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்தார்ப்ப
நடந்த வெல்லாம் வாய்காவா
மழவர் ஓதை வளவன்றன்
வளனே வாழி காவேரி”
(4)

காவிரியாற்றிற்கு உரிய சோழன் கங்கையாற்றையோ குமரி(கன்னி) யாற்றையோ சேர்ந்தாலும் கயலாகிய கண்ணையுடைய காவேரி சோழனுடன் ஊடல் கொள்ள மாட்டாள். அவ்வாறு ஊடல் கொள்ளாதிருப்பது தான் கற்புடைமையாகும். காவிரியே நீ வாழி - என்பதில் உள்பொருள் உள்ளது. விளையாட்டாகப் பாடிய இது மாதவியின் நெஞ்சில் வினையை விதைக்கத் தொடங்கியது. இனி அடுத்த கருத்துகட்குச் செல்லலாம்.

2. சார்த்து வரி - புகாரே எம்மூர்

முன்பு சூளைப் பொய்த்தவர் இவர் என்பதை எப்படி அறிவோம்? சங்கையும் முத்துகளையும் கண்டு, திங்களும் விண்மீன்களும் என எண்ணி -- அல்லி மலரும் புகாரே எம்மூர். (5).

பெண்கள் வீசிய குவளை மலர்களைக் கண்களே எனச் சிலர் மருண்டு நோக்கும் புகாரே எம்மூர் (6).

அன்று கையுறை ஏந்திவந்தவரை இன்று யாம் வேண்டி நிற்போம் என்பதை முன்கூட்டி அறியோம். கண்ணுக்கும் மலருக்கும் வேறுபாடு தெரியாமல் வண்டு மயங்கும் புகாரே எம்மூர் (7).

இந்தக் கருத்துகள் கொண்ட மூன்று பாடல்களும் தலைவன்மேல் குறைகூறிக் குற்றம் சுமத்தும் பாடல்கள்,