பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

164

சுந்தர சண்முகனார்



ஒருவர் வந்து அருள் புரிவாய் என்றார். அவர் நம் மான் போலும் நோக்கை மறவார். (44)

நேற்று ஒருவர் வந்து, அன்னம் துணையுடனே ஆடியதையே நோக்கி நின்றார். அவர் நம்மைப் பிரியார். (45)

குருகே! எம் கானலை வந்து அடையாதே. ஏனெனில், நீ எம் தலைவனுக்குப் பிரிவு நோயை உணர்த்துவதில்லை; அதனால் நீ இங்கு வந்து அடையாதே! (46)

மாலைப் பொழுதே! வலையர் நெய்தல் யாழ் வாசிக்க நீ வந்தாய். என் உயிர் கொள்வாய். நீ வாழி! (48)

பிரிந்தவரின் உயிரை முற்றுகையிட்டாய். முற்றுகை இட்ட மதில்புற வேந்தனுக்கு நீ என்ன உறவு? (மதில்புறத்து நிற்கும் தலைவனைக் குறிப்பிட்டுச் சொன்னது இது) (49)

மாலையே! உலகெங்கும் கண்ணை மூட இருளைக் கொண்டு நீ வந்திருக்கிறாய். அவர் மணந்து பிரிந்ததால் உலகமே வறியதாய்த் தோன்றுகிறது. (50)

கடல் சூழ் தெய்வமே மாலைப் பொழுதை எண்ணாமல் பொய்ச்குள் உரைத்தவரின் குற்றத்தைப் பொறுத்தருளும்படி நின் மலரடி வணங்குகிறோம். (51)

இவ்வாறாக, கோவலன் வேறொருத்திமேல் தொடர்பு உள்ளதுபோல் குறிப்பு வைத்துப் பாட, பதிலுக்கு மாதவியும் வேறொருவன் மேல் தொடர்பு உள்ளது போல் குறிப்பு வைத்துப் பாடினாள். ஊழ்வினை வந்து உந்தியதால், கோவலன் மாதவிமேல் சினமும் வெறுப்பும் கொண்டு, பொழுது கழிந்ததால் மாதவியை விட்டுப் பிரிந்து ஏவலருடன் சென்றுவிட்டான். மாதவி உள்ளம் வருந்தி, காதலன் போய்விட்டதால் தனியளாய்த் தன்வீடு சேர்ந்தாள். (52)