பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சுந்தர சண்முகனார்



புறப்படுமுன், கண்ணகியைக் கட்டித் தழுவி ஆறுதல் உரை கூறி, தன் கண்களிலிருந்து வந்த நீரை மறைத்துக் கொண்டு புறப்பட்டபோது இருவரும் உணர்ச்சியின் எல்லையைக் கடந்தனர்.

கோவலன் கண்ணகியைப் பிரிந்து சென்றதும் விரைவில் இறந்துவிடப் போகிறான். ஆதலின், காப்பிய முன்னோட்டச் சுவைக்காக இளங்கோ இப்படி ஓர் உருக்கமான காட்சியைப் படைத்துள்ளார். இங்கே, சேக்சுபியரின் (Shakespeare) ‘இரண்டாம் ரிச்சர்டு மன்னன் (King Richard II) என்னும் நாடகத்தில் உள்ள ஒரு காட்சி நினைவிற்கு வருகிறது. ரிச்சர்டு மன்னன் இங்கிலாந்தை ஆண்டு கொண்டிருந்தபோது தன் பங்காளி மன்னனாகிய பாலிங் புரோக் (Bolingbroke) என்பவனை நாடு கடத்தியிருந்தான். ரிச்சர்டு மேல்பார்வை யிடுவதற்காக அயர்லாந்து சென்றிருந்தபோது, பாலிங் புரோக் இங்கிலாந்துக்கு வந்து ஆட்சியைப் பிடித்துக் கொண்டு இரண்டாம் ரிச்சர்டு மன்னனைச் சிறையிலிட்டான். பின்னர்க் கொலை ஒறுப்பும் (மரணதண்டனையும்) தரப் பட்டது. இறுதியில் ரிச்சர்டைக் கொலைக் களத்திற்கு அழைத்துக்கொண்டு போனபோது, அவனுடைய மனைவி வழியில் அவனைக் காண்கிறாள். இருவரிடையேயும் உருக்கமான கட்டம் நடந்தது. பின்னர் ரிச்சர்டு கொலையுண்டான்.

இது சேக்சுபியர் எழுதியது. நடந்துள்ள வரலாற்றின் படி நோக்கின், ரிச்சர்டும் அவன் மனைவியும் சந்திக்கவே இல்லையாம். நாடகச் சுவைக்காகச் சேக்சுபியரே இப்படி ஒர் உருக்கமான காட்சியைப் படைத்தாராம் - என்று திறனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

சேக்சுபியருக்குப் பல நூற்றாண்டுகட்கு முன்பே இளங்கோவடிகள் இப்படி ஒர் உருக்கமான காட்சியைப் படைத்திருப்பது மிக்க இலக்கியச் சுவையளிக்கிறது.