பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

சுந்தர சண்முகனார்



சோழ மன்னனை முதல் குடிமகனாக வைத்து எண்ணுங்கால், அடுத்ததாக வைக்கப்பெறும் குடிமக்களுள் மிகவும் உயர்ந்தோங்கிய செல்வனாம் மாசாத்துவான். முடியரசு - குடியரசு என்றெல்லாம் பேசுகிறார்களே சோழனோ, குடிமக்களுக்குள் முதல் குடிமகன் (தலைமகன்) என்று கூறப்பட்டிருப்பது மிக்க சுவை பயக்கிறது. ‘செல்வத்துப் பயனே ஈதல்’ என்னும் புறநானூற்றுப் (189) பாடலின் பொன்னான கருத்துப்படி, மாசாத்துவான், வந்து கொண்டிருந்த செல்வங்களைப் பிறர்க்கு வழங்கினானாம்.

அத்தகையோனின் செல்வ மகன் கோவலன். ‘மண் தேய்ந்த புகழினான்’ எனக் கோவலனை இளங்கோ அடிகள் குறிப்பிட்டுள்ளார். இந்த மண்ணுலகம் மிகப் பெரியது; ஏறத்தாழ இருபத்தைந்தாயிரம் கல் (மைல்) சுற்றளவுள்ளது. இதனினும் பெரிய புகழ்ப் பருமன் உடையவனாம் கோவலன். மண்ணுலகின் அளவைத் தேய்த்த அதாவது குறைத்த புகழாளன் என்பது கருத்து. இந்தப் பொருள், அளவு (quantity) கருதிக் கூறப்பட்டது.

தரம் (quality) கருதியும் இதற்கு வேறொரு வகையான பொருள் கூறலாம். அதாவது: உலகில் உயிர்கள் பயன் படுத்தும் உணவுப்பொருள், உடைப்பொருள், உறையுள் பொருள், உலோகப் பொருள்கள் யாவும் மண்ணிலிருந்தே - மண் வாயிலாகவே கிடைக்கின்றன. “இலம் என்று அசைஇ, இருப்பாரைக் காணின், நிலம் என்னும் நல்லாள் நகும்” (1040) என்னும் குறள் ஈண்டு எண்ணத் தக்கது. இவ்வாறு உதவும் மண்ணைவிட மிகுதியாக உதவுகின்றவனாம் கோவலன். இவ்வகையிலும், மண்ணின் புகழைத் தேய்த்தவனாம் - குறைத்தவனாம் கோவலன் - என்பது மற்றொரு வகைக் கருத்து. பிறர்க்கு உதவுவதால்தான் மிக்க புகழ் கிடைக்கும். அதுவே உயர்ந்த புகழாகும்.