பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

189



உண்டு ஆதலின், இங்கே தமிழர் நாகரிகம் சிறப்பித்துச் சுட்டப்பட்டது. இராமனும் சீதையும் அண்ணனும் தங்கையும் ஆவர் - இவர்கள் கணவனும் மனைவியுமாக மணந்து கொண்டனர் எனப் பெளத்த இராமாயணம் கூறுகிறது. இதை இம்மட்டில் விட்டுவிடலாம்.

வடமொழியில் உள்ள சகோதரர் என்பதன் நேர் மொழி பெயர்ப்பாக, 'உடன் வயிற்றோர்' என்பது இளங்கோவால் அறிவிக்கப்பட்டுள்ளது. சக என்றால் உடன்; உதரம் என்றால் வயிறு, சக + உதரர் என்றால் உடன்வயிற்றோர் - என்பது பொருளாம். வடமொழியில் இந்தப் புணர்ச்சியைக் குணசந்தி என்பர். புறநானூற்றில் உள்ள

"பிறப்போ கன்ன உடன் வயிற்றுள்ளும்
சிறப்பின் பாலால் தாயும் மனம் திரியும்" (183-34)

என்னும் பாடல் பகுதியில் உள்ள 'உடன் வயிறு' என்பதும் சகோதர நிலையை அறிவிக்கிறது. ஒளவையின்

"உடன்பிறந்தார் சுற்றத்தார் என்றிருக்க வேண்டா
உடன்பிறந்தே கொல்லும் வியாதி" (மூதுரை-20)

என்னும் பாடலில் உள்ளவாறு உடன் பிறந்தார் எனலும் உண்டு. உடன் வயிறு, உடன் பிறப்பு என்பன ஒருபொருள் உடையன. சிற்றுார் மக்கள், உடன் பிறந்தவரை, 'என் பிறப்பு' எனக் குறிப்பிடுவது ஈண்டு எண்ணத் தக்கது. எனவே, இனி, பேசுவோரும் எழுதுவோரும், சகோதரர்கள் என்று கூறாமல், உடன் வயிற்றார் அல்லது உடன்பிறந்தார் என எழுதுவதும் பேசுவதும் நன்று.

இழிமக்கள், கோவலன்-கண்ணகியைப் பற்றி இழிமொழி கூறியதால் சினங்கொண்ட கவுந்தியடிகள், அவர்கள் நரிகள் ஆகுக எனக் கெடுமொழி (சாபம்) இட்டார். அவ்வாறே அவர்கள் நரிகள் ஆகி ஊளையிட்டனர். அந்த ஊளையைக் கேட்டதும், கோவலனும் கண்ணகியும் இப்படி நேர்ந்து