பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

சுந்தர சண்முகனார்


மாதவியால் ஒரு பெண் குழந்தை பிறந்தது மாதவிக்கு பிள்ளைப் பேற்றுத் தீட்டு கழிந்த பின், முதிய கணிகையர் சேர்ந்துகொண்டு, பெண் குழந்தைக்குப் பெயர் சூட்ட முனைந்தனர்:

“வேந்துறு சிறப்பின் விழுச்சீர் எய்திய
மாந்தளிர் மேனி மாதவி மடந்தை
பால்வாய்க் குழவி பயந்தனள் எடுத்து
வாலா மைந்நாள் நீங்கிய பின்னர்
மாமுது கணிகையர் மாதவி மகட்கு
நாம நல்லுரை நாட்டுதும் என்று
நாமின் புறுஉம் தகை மொழி கேட்டாங்கு
... .... .... ... ... ... ... .... .... ... ... ...
எம்குல தெய்வப் பெயரீங்கு இடுகென
அணிமேகலையார் ஆயிரம் கணிகையர்

மணிமேகலை என வாழ்த்திய ஞான்று...”
(21-39)

என்பது பாடல் பகுதி. மாதவி, வேந்தனால் தலைக்கோல் விருதும் ஆயிரத்தெட்டுக்கழஞ்சுப்பொன்னும் பெற்றவள் என்பதை, வேந்துறு சிறப்பின் விழுச்சீர் என்னும் பகுதி அறிவிக்கிறது.

இந்தக் காலத்தில் பரத்தமைத் தொழில் தமிழ்நாட்டில் தடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அந்தக் காலத்தில் இந்தத் தொழில் அரச ஒப்புதலுடன் நடந்துள்ளது என்பதை இதனால் அறியலாம்.

தாய் குழந்தை பெற்ற சிலநாள் கழித்துத்தான் பிள்ளைப் பேற்றுத்தீட்டு (புனிறு) கழியுமாம். இந்தக் காலத்தில் சில குடும்பங்களில் ஒன்பதாம் நாள் தீட்டு கழிப்பார்கள். நாள் கணக்கில் இடத்திற்கு இடம் மாறுதலும் இருக்கலாம்.