பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

195


இயற்கையாக வாய்த்த மற்றொரு செய்தியும் இங்கே எண்ணத்தக்கது. இக்காலத்தில் பெண் குழந்தையினும் ஆண் குழந்தையே விரும்பப்படுகிறது. எல்லாருக்குமே ஆண் குழந்தைகளே பிறந்தால், அவர்கள் மணம் செய்து கொள்வதற்குப் பெண் வேண்டாவா - என்பதை ஆண் விரும்பிகள் எண்ணிப் பார்ப்பதில்லை. சில இடங்களில் தொடக்கத்திலேயே பல வழிகளில் பெண் குழந்தைகள் கொல்லப்படுவதாகச் செய்திகள் வருகின்றன.

மற்றையோர் பெண் குழந்தையை விரும்பாமல் ஆண் குழந்தையை விரும்பினும், வேசியர் ஆண் குழந்தையை விரும்பாமல் பெண் குழந்தையையே பெரிதும் விரும்புவர் என ஒரு செய்தி சொல்லப்படுகிறது. ஏன் எனில், எதிர்காலத்தில் வேசித் தொழில் நடத்திப் பொருள் ஈட்டுவதற்கு இந்தப் பெண் பிள்ளைகளே முதல் பொருளாகப் (மூலதனமாகப்) பயன்படுத்தப்படுகின்றனர் - அதனால் என்க. மற்ற வேசியர்களின் குழந்தைகளின் தந்தை பெயர் தெரியாது. மாதவி நிலைவேறு. அவள் கோவலனை மட்டுமே கொண்டிருந்ததனால் அவள் குழந்தை தகப்பன் பெயர் தெரிந்த குழந்தையாகும்.

பெண்குழந்தைக்குப் பெயர் சூட்டு விழா நடத்த வேண்டும் என்ற செய்தி கோவலனுடைய செவிக்கு எட்டியது, கோவலனின் முன்னோர்களுள் ஒருவர் நடுக்கடலில் கப்பலோடு அழியக் கூடிய சூழ்நிலை ஏற்பட, அப்போது ‘மணிமேகலா தெய்வம்’ என்னும் ஒரு பெண் தெய்வம் அவரையும் கப்பலையும் காப்பாற்றியதாம். அதிலிருந்து, கோவலனின் முன்னோர் தலைமுறையினர் மணிமேகலா தெய்வத்தையே தம் குலதெய்வமாகக்கொண்டு வழிபட்டு வந்தனர். இந்தக் காலத்திலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒவ்வொரு குல தெய்வம் கொண்டாடப்படுவதைக் காணலாம். இவ்வாறே, கோவலனும் தன்