பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

சுந்தர சண்முகனார்


குலதெய்வத்தின் பெயராகிய ‘மணிமேகலை’ என்பதையே தன் பெண் குழந்தைக்கு இடச் செய்தான்.

குழந்தை பிறந்ததும் பெயர் சூட்டு விழா, பின் முதல் முதல் தொட்டிலில் இடும் விழா, பின் முதல் முதலாகச் சோறுட்டும் விழா, பின் காதணி விழா, பின் எழுத்தறிவிக்கும் விழா எனப் பல விழாக்கள் நடக்கும். அவற்றுள் முதலாவதாகிய பெயர்சூட்டு விழாவைக் கோவலன் நடத்தினான்.

ஆயிரம் கணிகையர் சேர்ந்து ‘மணிமேகலை’ எனக் கூறிக் கூறிக் குழந்தையை வாழ்த்தினார்களாம். ஆயிரம் என்பது இங்கே மிகுதியைக் குறிக்கிறது. கணிகையர் தெருக்கள் தனியாக இருந்ததை இலக்கியங்களாலும், இப்போதும் இருப்பதை நேரில் பார்த்தும் அறியலாம். தான் பத்தினியாக இருந்தால் தேவடியாள் தெருவிலும் குடியிருக்கலாம் என்னும் பழமொழியிலும் தேவடியாள் தெரு குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் கணிகையர் என்றால், பல கணிகையர் தெருக்களில் உள்ள கணிகையர் பலரும் ஒரு குலத்தார் போல் கூடிக் கொண்டாடியுள்ளனர் என்பது கருத்தாம். அவ்வளவு ஏன்? இளங்கோவே தம் நூலில் இரண்டு இடங்களில் கணிகையர் வீதி தனியே இருப்பதைக் குறிப்பிட்டுள்ளார். அவை:

“பண்ணும் கிளையும் பழித்த தீஞ்சொல்
எண்ணெண் கலையோர் இருபெரு வீதி”

(ஊர் காண் காதை - 166:167)


“எண்ணான்கு இரட்டி இருங்கலை பயின்ற
பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதி”

(அழல்படு காதை - 138, 139)

எண் எண் = (8X8= 64) அறுபத்து நான்கு. எண் நான்கு இரட்டி = எண் நான்கு (8x4=32) முப்பத்திரண்டு;