பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

200

சுந்தர சண்முகனார்


வருவது, அஞ்சாத் துணிவால் வருவது, புகழால் வருவது, கொடையால் வருவது எனப் பெருமிதம் (வீரம்) நால்வகைப் படுமாம்:

“கல்வி தறுகண் இசைமை கொடையெனச்

சொல்லப் பட்ட பெருமிதம் நான்கே” (9)

என்பது தொல்காப்பிய நூற்பா. தறுகண் = அஞ்சாத துணிவுடைமை. இசைமை = புகழ். கோவலன் யாழ் மீட்டிப் பாடியதைக் கொண்டு கல்வி உடையவன் என அறியலாம். யானையை அடக்கியதால் தறுகணன் என்பது புலப்படும். மண்தேய்த்த புகழினான் - இசை போக்கிக் காதலால் கொண்டேத்தும் கிழமையான் என்னும் மங்கல வாழ்த்துப் பாடல் பகுதியால் இசைமை (புகழ்) உடையவன் என்பது பெறப்படும். மகளது பெயர்குட்டு விழாவின்போது,

‘செம்பொன் மாரி செங்கையின் பொழிய’ (41)

என்று சொல்லியுள்ளபடி பொன் கொடை கொடுத்ததாலும் இன்னும் சிலர்க்கு உதவி செய்திருப்பதாலும் கொடை என்னும் பெருமிதம் (வீரம்) உடையவன் என்பது அறியப் படும். எனவே, ஆசிரியர் அடிகள், மாடலன் வாயிலாகக் கோவலனைக் கருணை மறவன் எனக் குறிப்பிட்டிருப்பது சாலவும் பொருந்தும்.

“அறத்திற்கே அன்பு சார்பு என்ப அறியார்
மறத்திற்கும் அதே துணை”

என்னும் குறள் ஒப்பு நோக்கத்தக்கது.

இரட்டைக் காப்பியம்

சிலப்பதிகாரத்தையும், மணிமேகலையையும் இரட்டைக் காப்பியம் என்பர். அதற்கு ஏற்றாற்போல், சிலம்பிலுள்ள “தளர்ந்த நடையில் தண்டு கால் ஊன்றி வளைந்த யாக்கைமறையோன்” (15-44,45) என்னும் பகுதி மணிமேகலையிலும்,