பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

203


மகனிழந்த தாய் பிரிவுத்துயராலும் வறுமையாலும் வாடி வருந்தினாள். அவளுடைய சுற்றத்தினரும் அவளைக் காக்க முடியாத அளவுக்கு வறுமை வாய்ப்பட்டு அல்லல் உழந்தனர். இந்த நிலைமையை அறிந்த கோவலன், மகனிழந்த தாய்க்கும் சுற்றத்தார்க்கும் போதிய பொருளுதவி செய்து அவர்கட்குப் பல்லாண்டுகட்கு மறுவாழ்வு தந்தான். இல்லாதவர்க்கு உதவியதால் மாடலன் வாயிலாகக் கோவலன் “இல்லோர் செம்மல்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளான்.

“ஒழிககின் கருத்தென உயிர்முன் புடைப்ப,
அழிதரும் உள்ளத் தவளொடும் போந்தவன்
சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும்
பற்றிய கிளைஞரின் பசிப்பிணி அறுத்துப்

பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல்” (15:86-90)

காவிரிப்பூம்பட்டினத்தில் பூத சதுக்கத்தில் உள்ள பூதம், தீமை செய்தவர்களை அடித்துக் கொன்று விடுமாம். சிலம்பில் இந்திர விழவு ஊர் எடுத்த காதையில் பூத சதுக்கம் பற்றிக் கூறப்பட்டுள்ளது. சதுக்கம் = நால்சந்தி = நான்கு தெருக்கள் கூடும் இடம். தவக்கோலத்தில் மறைந்து நின்று கூடா ஒழுக்கம் கொள்ளும் பொய்த் தவசிகளையும், கற்பு கெட்டு ஒழுகும் தீய பெண்களையும், முறை தவறும் அமைச்சர்களையும், பிறர் மனைவியை விரும்பிக் கெடுப்போரையும், பொய்ச் சான்று புகல்வோரையும், புறங்கூறுபவரையும் கொல்வேன் என்று சதுக்கப் பூதம் எங்கும் கேட்க எச்சரிக்கைக் குரல் எழுப்பி, அவ்வாறு தவறு செய்பவர்களைக் கொன்று விடுமாம். பாடல் பகுதி:

“தவமறைங் தொழுகும் தன்மை யிலாளர்
அவமறைக் தொழுகும் அலவல் பெண்டிர்
அறையோ கமைச்சர் பிறர்மனை நயப்போர்
பொய்க்கரி யாளர் புறங்கூற் றாளர்என்

கைக்கொள் பாசத்துக் கைப்படுவோர் எனக்