பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

205


விட்டது - இன்னும் சிறிது தொலைவிலேயே மதுரை உள்ளது என்று அவர்கள் கூறினராம். இந்நிகழ்ச்சியால், கோவலன் எவருடனும் கலந்து பழகுபவன் என்பது புலப்படும்.

ஆறுதல் உரை

கோவலனை இவ்வாறு பலபடப் புகழ்ந்து பாராட்டிய மாடலன், இறுதியில் அவனுக்கு ஆறுதல் கூறுகின்றான். கோவலனே! யானறிந்த வரையும், நீ இந்தப் பிறப்பில் நல்வினைகளே செய்துள்ளாய். அங்ஙனம் இருக்கவும், வீட்டை விட்டுப் பிரிந்து, தனியொருவனாக நின்று, இந்தத் திருத்தகு மாமணிக் கொழுந்தாகிய கண்ணகியுடன் இங்கே வந்தது பழைய ஊழ்வினைப் பயனாக இருக்கலாம் - வருந்தாதே - என்றான்:

“இம்மைச் செய்தன யானறி கல்வினை
உம்மைப் பயன்கொல் ஒருதனி உழந்துஇத்
திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது

விருத்த கோபால நீ...” (14:91-94)

என்பது பாடல் பகுதி.

இளங்கோவடிகள், காப்பியத்தின் தொடக்கத்திலேயே கோவலனைப் புகழ்ந்திருப்பினும், அவனுடைய வாழ்க்கையின் இடைப் பகுதியில், மனைவியையும் பெற்றோரையும் பிரிந்து கணிகை வீட்டில் காலத்தையும் செல்வத்தையும் கழித்து விட்டானாதலின், காப்பியம் படிப்போர்க்கு, அவன் இறந்தால்கூட அவன்மேல் பரிவு ஏற்படாது. அதனால், கொலைக்களக் காதைக்கு முன்காதையாகிய அடைக்கலக் காதையில் அவனுடைய சிறப்புகளையெல்லாம் மாடலன் வாயிலாக இளங்கோவடிகள் பொழிந்து தள்ளியுள்ளார். இஃது ஒருவகைக் காப்பியக் கலைத்திறனும் காப்பியச்

சுவையூட்டலுமாகும்.