பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

210

சுந்தர சண்முகனார்


தேடிக் கொண்டுவரும்படி ஏவலாளரைப் பல இடங்கட்கு அனுப்பியும் பயன் இல்லை. புகார் நகரம் இராமனைப் பிரிந்த அயோத்திபோல் பேதுற்றுக் கிடக்கிறது. இவற்றை வயந்தமாலை வாயிலாக அறிந்த மாதவி வருத்தத்தோடுள்ளாள் என்பதை அறிந்து யான் அவளைக் காணச் சென்றேன். அவள் இந்த மடலை எழுதிக் கூந்தலால் மண் முத்திரையிட்டு உன்னிடம் அளிக்கச் சொன்னாள். அவ்வாறே யான் தேடியலைந்து இங்கே உன்னைக் கண்டேன் என்று கூறி, மாதவி தந்த மடலைக் கோவலனிடம் கொடுத்தான். மாதவியின் கூந்தல் வாடை வீசிய அம்மடலைக் கோவலன் பெற்று விரித்துப் படித்துப் பார்த்தான். அதில் எழுதியிருந்ததாவது: - (புறஞ்சேரி யிறுத்த காதை)

“அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர் பணியன்றியும் குலப்பிறப் பாட்டியோடு
இரவிடைக் கழிதற்கு என்பிழைப்பு அறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்

பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி” (87-92)

என்பது மடலில் எழுதப்பட்டிருந்தது. இதன் கருத்தாவது:

அடிகளே (பெரியோய்) முதலில் உம் திருவடிகளை யான் வீழ்ந்து வணங்குகிறேன். யான் கூறும் எளிய செய்தியை நீங்கள் மனத்தில் கொண்டு ஏற்க வேண்டும். பெற்றோர்க்குத் தொண்டு செய்யாமல் உயரிய குடியில் பிறந்த கண்ணகியோடு இரவில் புறப்பட்டதற்குக் காரணமாகிய என் பிழையைப் பொருட்படுத்தாது, நெஞ்சம் செயலற்று வருந்துவதை நீக்கல் வேண்டும். குற்றமற்ற நல்லறிவுடைய மேலோய் போற்றி (வணக்கம்) — என்பது இதன் கருத்து, சிறிது மாற்றிப் பொருள் கொள்வாரும் உளர்.