பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

211


மடலில் முதலிலும் இறுதியிலும் இக்காலத்தில் வணக்கம் தெரிவிப்பது போலவே இந்த மடலிலும் வணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கண் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என இக்காலத்தில் கூறுவது போலவே, இம்மடலிலும் ‘முன்னர்’ என்னும் சொல் இடம் பெற்றுள்ளது. எனது தாழ்ந்த - எளிய உரையைச் செவிமடுக்க வேண்டும் என இக்காலத்தில் அவையடக்கம் கூறுவது போலவே, “வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும்” என்பது கூறப்பட்டுள்ளது. ஈற்றில் போற்றி உள்ளது.

இந்த மடலைக் கோவலன் படித்துப் பார்த்ததும், மாதவி “தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கிச்” (95) சொல்லலானான். தன் தீது இலள் எனத் தளர்ச்சி நீங்கினான் என்றால் என்ன? “மாதவி நம்மை இன்னும் வெறுக்கவில்லை — குல மரபின்படி வேறொருவனை வரித்துக் கொள்ளவும் இல்லை — நம்மேலேயே பித்தாக — உள்ளாள்” என்பதை அறிந்ததனால், அவள் தொடர்பான ஒருவகைத் தளர்ச்சி நீங்கினான் — என்பது கருத்து. ஆனால் மாதவியின் கடிதத்திற்கு மயங்கி அவள் பக்கம் சாய்ந்துவிடவில்லை.

கோவலனின் மூளை இங்கே சிறிது திறமையாகச் செயல்பட்டது. மாதவி தந்த மடலில் உள்ள செய்தியைத் தன் தந்தையார்க்கு அப்படியே அனுப்பினும் அது பொருந்தும்போல் தோன்றியது. எனவே, அந்த மடலைக் கோசிகனிடம் தந்து இதை என் தந்தையாரிடம் சேர்த்து விடுக எனக் கூறினான். மேலும், தன் பெற்றோர்க்குத் தன் வணக்கத்தைத் தெரிவிக்கும்படியும், அவர்களின் மனத்துயரைக் களைந்து ஆறுதல் கூறும்படியும் சொல்லி அனுப்பினான். பெற்றோரைப் பிரிதற்குக் காரணமாயிருந்த மாதவி தந்த மடலே, இப்போது பெற்றோரைப் பற்றி எண்ணத் தூண்டியுள்ளது. சுவையான கறபனை.