பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/217

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

213


ஒரு சோலையில் சமணச் சாரணர் வந்தபோது அவர் காலில் விழுந்து கோவலன் வணங்கியுள்ளான்.

மாதரி வீட்டில், இரவு வருவதற்குள், சமணர் வழக்கப்படி உணவு கொண்டான்.

இவற்றையெல்லாம் ஒப்பிட்டு நோக்குங்கால், கோவலன் இன்ன சமயத்தான் எனத் தெளிவாகக் கூற முடியாவிடினும், சமண சமயத்தவன் எனக் குறிப்பாகக் கொள்ள இடமுண்டு. காரணங்கள்?

இந்தக் காலத்தில் அருகன் கோயில் இல்லாத ஊர்களில் எல்லாம் அந்தக் காலத்தில் அருகன் கோயில் இருந்துள்ளது. புகாரிலும் சமணம் பரவியிருந்தது. உடன் வழி கடந்த கவுந்தி சமணர். மதுரையில் உள்ள அருகன் கோயிலை வணங்கக் கவுந்தி சென்றுள்ளார். கோவலன் மதுரையில் பொழுது போவதற்குள் உணவு கொண்டான். மதுரையில் பெரிய அளவில் சமணம் பரவியிருந்தது. இந்த வரலாறு நிகழ்ந்த சில நூற்றாண்டுகட்குப்பின், மதுரையில் ஞானசம்பந்தர் சமணரோடு வாதிட்டு வென்று பாண்டிய மன்னனையும் சைவனாக்கியுள்ளார். தெற்கே இப்படியென்றால், வட தமிழ் நாட்டில், காஞ்சியில் ஆண்ட மகேந்திரவர்மப் பல்லவன் முதலில் சமணனாய் இருந்தமையும் நாவுக்கரசர் போராடினமையும் அறிந்த செய்தியே. தமிழ்நாடு முழுதும் சமணம் தலைவிரித்தாடிய காலத்தில் கோவலனும் சமணத்தைச் சார்ந்திருக்கலாம்.

மாமுது பார்ப்பான் மறை வழிப்படிக் கோவலனுக்குத் திருமணம் செய்து வைத்தான் எனில், சமணத்தில் மாறியவர்களும் பழைய முறையைப் பின்பற்றுவது உண்டு. புதுச்சேரியில் கத்தோலிக்கக் கிறித்தவர்கள் மாதாகோயிலில் திருமணம் முடித்துப் பின் வீட்டிற்கு வந்து பழங்கால முறைப்படி எல்லாம் செய்கின்றனர். சமணமும் பெளத்தமும்