பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

217


இருந்திருப்பினும், பார்ப்பவர் கண்ணுக்கு அவனுடைய குறைபாடுகளே மிகுதியாய்த் தெரியும். முதல் குறை பெற்றோரைப் பிரிந்தமை. பெற்றோர்கள் இவனைத் திருத்தப் பல அறிவுரைகள் கூறினர் . இவன் பொருட் படுத்த வில்லை - பெற்றோர்க்கு அடங்காப் பிள்ளையாகவே இருந்தான் என்பது ‘இரு முது குரவர் ஏவலும் பிழைத்தேன்’ என இவனே பின்னோரிடத்தில் கூறியிருப்பது கொண்டு தெளியலாம்.

அடுத்தது கண்ணகியைப் பிரிந்த குற்றம், ஒரு பெண்ணின் வாழ்வைக் கெடுத்து ‘வாழா வெட்டி’ என்னும் பெயர் ஏற்படச் செய்தமை கொடியது. மற்றும், தந்தைக்கு உதவியாக உடனிருந்து வாணிகத்தைக் கவனிக்காமை குற்றம். வாணிகத்தைப் பெருக்கிப் பொருள் ஈட்டாவிடினும், இருந்த பொருளையெல்லாம் அழித்தமை இன்னும் பெரிய குற்றமாகும். பெற்றோருக்கும் உற்றார் உறவினர்க்கும் தெரியாமல், இருளில் கண்ணகியை அழைத்துக்கொண்டு தனி வழி சென்றமை குற்றத்தின் மேல் பெருங்குற்றமாகும்.

ஆகக் கோவலன் வாழ்வாங்கு வாழவில்லை. ‘சாகிற காலத்தில் சங்கரா - சங்கரா’ என்பது போல் இறுதிக் காலத்தில் தன் குறைபாடுகளை உணர்ந்து திருந்தினாலும், முடிவு கொல்லப்பட்டதேயாகும்.

கோவலனின் குறைபாடுகள், ஒரு வளமான காப்பியத்தைத் தமிழ் மொழிக்குத் தந்தது என்ற அளவில் ஆறுதல் கொள்ளலாம்.