பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



20. கண்ணகியின் கற்புநிலை

மங்கல வாழ்த்துப் பாடல்

சிலப்பதிகாரக் காப்பியத்தில் தொடக்கத்திலிருந்து இறுதி வரை இடம்பெற்றுள்ள சுதை உறுப்பு (கதைப் பாத்திரம்) கண்ணகியே. அவள் புகார் நகரில் வாழ்ந்த மாநாய்கன் என்பவனின் மகள். மாநாய்கனோ மழையெனப் பொருள்களைப் பொழியும் வளவிய கையை உடையவனாம். கண்ணகி பொற்கொடி போன்ற உருவினள், தாமரை மலரில் தங்கும் திருமகள் போன்ற திருவினள்; பாராட்டத்தக்க அழகிய - மங்கலமான வடிவழகு உடையவள்; அருந்ததி போலும் கற்பினள்; பெண்டிர் போற்றத்தக்க உயரிய பண்பினள்; அனைவரிடத்தும் அன்பினள்; திருமணத்தின் போது பன்னிரண்டு அகவை உடையவளாய் இருந்தாள். பாடல்:

“போகநீள் புகழ்மன்னும் புகார்நகர் அதுதன்னில்
மாகவான் நிகர்வண்கை மாநாய்கன் குலக்கொம்பர்
ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண்டு அகவையாள்
அவளுந்தான்,
போதிலார் திருவினாள் புகழுடை வடிவென்றும்
தீதிலா வடமீனின் திறம்இவள் திறமென்றும்
மாதரார் தொழுதேத்த வயங்கிய பெருங்குணத்துக்
காதலாள் பெயர்மன்னும் கண்ணகிஎன்பாள் மன்னோ”

(மங்கல வாழ்த்துப் பாடல்: 23.29)

என்பது பாடல் பகுதி. சிறார்க்குக் கதை சொல்பவர்கள், ஒரே ஒரு ஊரிலே அப்பா அம்மாவாம். அவர்களுக்கு ஒரு