பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

222

சுந்தர சண்முகனார்


உடனே புறப்பட்டுவிட்டாள் - ஆதலின், வடமீன் (அருந்ததி) அனைய கற்பினள் எனப் பாராட்டப்பட்டுள்ளாள்.

ஈண்டு ‘பெயர் மன்னும் கண்ணகி என்பாள்’ என்று இளங்கோ குறிப்பிட்டிருப்பது மிகவும் பொருத்தமானது. மன்னுதல் என்னும் சொல்லுக்கு நிலைத்திருத்தல் என்னும் பொருள் உண்டு. இங்கே,

“மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்

தம்புகழ் கிறீஇத் தாம் மாய்ந்தனரே” (165:1, 2)

என்னும் புறநானூற்றுப் பாடல் பகுதி எண்ணத்தக்கது. கண்ணகி என்னும் பெயர் இன்றும் நிலைத்துள்ளது. சிலப்பதிகாரம் உள்ளவரையும் - ஏன் - தமிழ் உள்ள வரையும் இந்தப்பெயர் புகழுடன் நிலைத்திருக்கும். கோயில் எடுத்திருப்பதால் பெயர் நிலைத்திருப்பது உறுதி. கண்ணகியின் வரலாற்றை - அவளுக்குத் தம் தமையன் கோயில் எடுத்த வரலாற்றை இளங்கோ உடனிருந்து அறிந்தவராதலின் பெயர் மன்னும் கண்ணகி என்று தொடக்கத்திலேயே பிள்ளையார் சுழி (தொடக்கக் குறி) போட்டுள்ளார். அருந்ததி மக்கள் உள்ளத்தில் என்றும் இருப்பதுபோல் கண்ணகியும் இருப்பாள் என்பது கருத்து.

மனையறம் படுத்த காதை
கண்ணகியின் நலம் பாராட்டல்

முதலாவதாகிய மங்கல வாழ்த்துப் பாடல் என்னும் பகுதியில் கோவலன் - கண்ணகி திருமணம் கூறப்பட்டது. இரண்டாவதாகிய மனையறம் படுத்த கதையில் இருவரும் குடும்பம் நடத்தினமை கூறப்பட்டுள்ளது. கண்ணகியும் கோவலனும் காதலில் சிறந்து, திங்களும் ஞாயிறும் ஒன்று சேர்ந்தாற்போல் இணைந்து இருவரின் தாரும் மாலையும் ஒன்றோடொன்று கலக்க அணைத்துக்கொண்டு தம்மை