பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

225


திருமகளோடு திங்கள் (நிலா) கடலில் பிறந்ததால், சிவன், தன் திருமுடியில் உள்ள பிறை நிலவை உனது நெற்றியாகும்படிச் செய்துள்ளார். மன்மதனது கரும்புவில் இரண்டாகப் பிளந்து உன் இரு புருவங்களாக ஆக்கப்பட்டுள்ளது. இந்திரனின் வச்சிரப்படையின் இடைப்பகுதி உனது இடையாக ஆக்கப்பட்டுள்ளது. முருகனின் வேல் இரண்டாகப் பிளக்கப்பட்டு உன் இரு கண்களாக ஆக்கப்பட்டுள்ளது என்று பாராட்டியுள்ளான்.

மற்றபுலவர்கள் பெண்ணின் நெற்றிக்குப் பிறையையும், புருவத்திற்கு வில்லையும், இடைக்கு ஒரு பொருளின் இடையிலுள்ள (உடுக்கையின் இடைப்பகுதி போன்ற) பகுதியையும், கண்ணுக்கு வேலையும் உவமையாகக் கூறுவது மரபு. அதே உவமைகளைப் புதுமுறையில் - புதிய கோணத்தில் இளங்கோ கூறியிருப்பது சுவையாயுள்ளது. அதாவது - சிவன் பிறையை இவள் நெற்றிக்குத் தந்தானாம்; மன்மதன் கரும்புவில்லைப் புருவத்திற்குக் கொடுத்தானாம்; இந்திரன் இடைப்பகுதி ஒடுங்கியிருக்கும் தன் வச்சிரப் படையின் (வச்சிராயுதத்தின்) இடைப்பகுதியை இவளது இடைக்கு ஈந்தானாம்; முருகன் தன் வேலை இவள் கண்ணிற்குத் தந்தானாம். உவமையை இந்த விதமாகப் புதுமைப்படுத்துவது சிறந்த புலவர்களின் மிக்க புலமைக்கு அறிகுறியாகும். (38-52-ஆம் அடிகள்)

இளங்கோ அடிகள் கையாண்டுள்ள இந்தப் புதிய முறையைப் புதுவைப் பாவேந்தர் பாரதிதாசனும் கையாண்டுள்ளார். எப்போது? தாம் இளைஞராய் ஆசிரியரிடத்தில் பாடம் பயின்ற தொடக்கக் காலத்திலேயே இவ்வாறு பாடியுள்ளார். பாவேந்தரின் ஆசிரியர் புதுவைப் பெரும்புலவர் (மகாவித்துவான்) பு. அ. பெரியசாமிபிள்ளை என்பவர். இவர் இறுதி எய்தியபோது, மாணாக்கர்