பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2. இயல் இசை நாடகப் பொருள்
தொடர்நிலைச் செய்யுள்

சிலப்பதிகாரத்தில் இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழ்க் கூறுகளும் இருப்பதாலும், பொருள் (கதைப் பொருள்) தொடர்ந்து அமைந்திருப்பதாலும், இந்நூல் இயல் இசை நாடகப் பொருள் தொடர்நிலைச் செய்யுள் என்று சிறப்பிக்கப்படுகிறது.

நாடகம் என்றாலே கதைத் தொடர்புடையது என்பதும், அதிலே நடிப்போடு இயலும் இசையும் கலந்திருக்கும் என்பதும் பெறப்படும். தமிழை, இயல்-இசை-நாடகம் என்னும் கூறுகள் உடைமையால் முத்தமிழ் என்பர். நாடகத்தில் இந்த முக்கூறும் இருப்பதால் சுருக்கமாக நாடகம் ஒன்றையேகூட முத்தமிழ் எனலாம். ஆயினும், சிலப்பதிகாரத்தில் இந்த முக்கூறுகளும் இருக்கும் பகுதிகளை ஒவ்வொன்றாகக் காணலாம்:

இயல்

இயல் என்பது, இசையும் நடிப்பும் இல்லாமல் கருத்து சொல்லும் பகுதி. சிலம்பில் உள்ள ஆசிரியம்-கலி-வெண்பா ஆகியவை இயல் கூறுகள். மற்றும், கதையமைப்பு, கவுந்திசாரணர்-மாடலன் முதலியோர் கூறும் அறிவுரைகள் - அறவுரைகள், பல்வேறு சுவை நிலைகள், அரசநீதி, பத்தினி வழிபாடு, மூன்று உண்மைகளை நிலைநாட்டல், நீதி நிலை நாட்டல், பல புனைவுகள் (வருணனைகள்), நாடு-நகர்-அரசுச் செய்திகள், பல படிப்பினைகள் - முதலியன இயல்