பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232

சுந்தர சண்முகனார்


பல்லிலே தோன்ற, குழந்தையின் மழலை போன்ற சொற்களால், வழியில் காணும் ஒவ்வோர் ஊரையும் பார்த்து இது தானா மதுரை - இது தானா மதுரை - இது இல்லையெனில் எவ்வளவு தொலைவில் மதுரை உள்ளது என்று வினவினாளாம். இதோ அண்மையில் உள்ளது - ஆறைங்காதத் தொலைவே - என்று கோவலன் இரக்கச் சிரிப்பு (அசட்டுச் சிரிப்பு) சிரித்துக் கொண்டே கூறினானாம். முப்பது காதம் என்றால் மலைப்பா லிருக்கும் என்று ஆறு ஐங்காதம் (ஆறு அல்லது ஐந்து என்னும் பொருள் படும் படியும்) எனக் கூறினானாம். இளங்கோ இந்தக் காட்சியை (சீனை) அமைத்ததில் ஒரு குறிப்பு உண்டு. அது பின்னர் விளக்கப் பெறும். கண்ணகி கோவலனது தோள்மேல் கையைப் போட்டுக் கொண்டு நடந்தாள் என்பதை அறியின், மேலும் அவளது மென்மை விளங்கும்.

இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில் கம்ப ராமாயணச் செய்தி ஒன்று இங்கே நினைவிற்கு வருகிறது. சீதையைத் தேடப் புறப்பட்ட அனுமனிடம், இராமர், சீதையைக் காணின் முன்பு நிகழ்ந்த சில செயல்களை அவளிடம் அடையாளமாகத் தெரிவிக்கும் படிச் சொல்லி யனுப்புகிறார். அவற்றுள் ஒன்று:- முடி துறந்து சீதையுடன் காடு நோக்கிப் புறப்பட்டபோது, நகரின் கடை வாயிலைக் கடக்கும் முன்பே, ‘காடு எங்கே உள்ளது - இன்னும் எவ்வளவு தொலைவில் உள்ளது?’ என்று கேட்ட சீதையின் பெண்மைத் தன்மையையும் நினைவு செய் - என்று சொல்லியனுப்பினார்:

“நீண்ட முடிவேந்தன் அருளேந்தி நிறை செல்வம்
பூண்டதனை நீங்கி நெறி போதலுறு நாளின்
ஆண்டநகர் ஆணையொடு வாயில் அகலாமுன்
யாண்டையது கானென இசைத்ததும் இசைப்பாய்”

(உருக் காட்டுப் படலம்-61)