பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/241

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

237


எத்தகைய உயர் பண்புடைய பெண்ணும் பெய் என்று சொன்னதும் மழை பெய்து விடாது என்னும் கருத்து திருவள்ளுவர்க்கும் தெரியும். அவர் இவ்வாறு சொன்னதின் கருத்து, கடவுளைக் கட்டி அழுது கொண்டிருக்காதீர்கள் - குடும்பத்தைக் கவனியுங்கள் என்ற புரட்சி உடையதாகும். ‘பெய் யெனப் பெய்யும் மழை’ என்பதை உயர்வு நவிற்சி அணியாகக் கொள்ளல் வேண்டும்.

“இலன்என்று அசைஇ இருப்பாரைக் காணின்
நிலன்என்னும் நல்லாள் நகும்”
(1040)

“குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்

மடிதற்றுத் தான்முங் துறும்” (1023)

என்னும் குறள்களில், சோம்பேறிகளைக் கண்டால் நிலமகள் சிரிப்பாள் என்றும், குடியை உயர்த்த முயல்பவனுக்குத் தெய்வமும் துணியைக் கீழ்ப்பாய்ச்சி கட்டிக் கொண்டு முந்தி வந்து பணி புரியும் என்றும் கூறியுள்ள கருத்துகள் உண்மையானவையா? அல்லது இலக்கியக் கற்பனையா? தெய்வம் சிரிக்காது - தெய்வம் துணியை இழுத்துக் கட்டிக் கொண்டு வராது என்பன திருவள்ளுவர்க்கும் தெரியும். இவை இலக்கியக் கற்பனை நயச்சுவையாகும். ‘தெய்வம் தொழா அள்’ என்னும் குறளும் இத்தகையதே. கணவன் மனைவியைத் தொழ வேண்டும் என்று எங்கும் கூறாமல், மனைவி கணவனைத் தொழவேண்டும்என்று கூறியிருப்பதை மட்டும் பகுத்தறிவாளர்கள் ஒத்துக் கொள்ளலாமா? யானும் ஒரு வகைப் பகுத்தறிவாளனே. யாராயிருப்பினும், நடுநிலைமையோடு எழுத வேண்டும் - பேசவேண்டும்.

இது தொடர்பான சிலப்பதிகாரப் பகுதியால், கண்ணகியின் தெய்வக் கொள்கை விளங்கும். அவள் கணவனைத் தெய்வமாகப் போற்றி வந்தாள்.