பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

239


தெய்வப் பூசனை செய்யும் சாலினி என்பாள் தெய்வம் ஏறப்பெற்றுக் (சாமிஆடிக்) கண்ணகியை நோக்கிப் பின் வருமாறு பாராட்டலானாள்.

“இவளோ, கொங்கச் செல்வி குடமலையாட்டி
தென் தமிழ்ப்பாவை செய்த தவக்கொழுந்து
ஒருமா மணியாய் உலகிற்கு ஓங்கிய

திருமா மணியெனத் தெய்வமுற்று உரைப்ப” (47-50)

என்பது பாடல் பகுதி. கண்ணகி இன்னும் சிறிது காலத்தில் தெய்வமாகப் போகிறாள் என்ற குறிப்பை, தெய்வம் ஏறிய சாலினி வாயிலாக இளங்கோ உணர்த்தியுள்ளார். தெய்வம் ஏறப்பெற்றவர்களே எதிர்காலம் பற்றி உரைக்க முடியுமாதன், இங்கே இளங்கோ சாலினியைப் பயன்படுத்திக்கொண்டார்.

சாலினியின் பாராட்டுரையைக் கேட்ட கண்ணகி மிகவும் கூச்சம் அடைந்து, இந்தப் பேரறிவு உடைய முதியவள், ஒன்றுக்கும் பற்றாத என்னை ஏதோ மயக்கத்தால் இவ்வாறு பாராட்டினாள் என்று கூறிக் கணவன் கோவலன் பின்னால் சென்று ஒடுங்கி மறைந்து புதிதாய்ச் சிறு நகை செய்தாள்;

“பேதுறவு மொழிந்தனள் மூதறிவாட்டி என்று
அரும்பெறல் கணவன் பெரும்புறத்து ஒடுங்கி

விருந்தின் மூரல் அரும்பி நிற்ப” (51-53)

என்பது பாடல் பகுதி. சிலர் பிறரைப் பேசவிடாமல் தாங்களே பேசிக்கொண்டிருப்பர் - தங்கள் பெருமைகளையே சொல்லிக் கொண்டிருப்பர். பிறர் தங்கள் பெருமைகளைச் சொல்லின் பூரித்துப்போவர். ஆனால், உயர் பண்பாளர் தங்கள் பெருமைகளைத் தாங்களே சொல்லார்; தங்கள் பெருமைகளைப் பிறர் கூறினும், கூசி, இந்தப் பெருமைகட்கு உரிய தகுதி எனக்கு இல்லை என்று அடக்கமாகக் கூறுவர். இந்த இனத்தைச் சேர்ந்தவள்