பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

242

சுந்தர சண்முகனார்


இளங்கோ கண்ணகியை ஓரிடத்தில் “முளைஇள வெண் பல் முதுக்குறை நங்கை” (15:202) எனக் குறிப்பிட்டுள்ளார். முதுக்முறை நங்கை என்பதற்குக் ‘குறைந்த வயதிலேயே பேரறிவு பெற்றுள்ள பெண்’ என்பது பொருளாகும்.

கண்ணகியின் கடைசிக் குடும்ப வாழ்க்கை

மதுரையில் மாதரி வீட்டில் கண்ணகியும், கோவலனும் அடைக்கலம் புக்குள்ளனர். உணவு ஆக்கி உண்பதற்காக உயர்ந்த சாலி அரிசியும், பலவகைக் காய்கறிகளும் கண்ணகிக்குக் கொடுக்கப்பட்டன.

கண்ணகி காய்கறிகளை அரிவாள்மணையில் அரிந்து திருத்தினாள். இதனால் மெல்லிய கைவிரல்கள் சிவந்து போயினவாம். முகத்திலிருந்து வியர்வை சொட்டிற்றாம். அடுப்பு மூட்டி உணவு ஆக்கியதால் புகை தாங்காமல் கண்கள் சிவந்தனவாம். மாதரியின் மகளாகிய ஐயை என்பாள் வைக்கோலால் முதல் முதலாக அடுப்பு மூட்டிக் கொடுத்தது. முதல் ஆக்கி முடிக்கும்வரை கண்ணகியின் கூடமாடே இருந்து உதவி செய்திருக்கிறாள். ஐயை மேல்வேலைக்குத் துணை புரிந்தாளே தவிர, மற்றபடி கண்ணகிதான் தனக்குத் தெரிந்த அளவுக்குக் கைப் பாகம் செய்து ஆக்கினாளாம். பாடல்: கொலைக் களக் காதை:

“மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய்
கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத்
திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன
கரிபுற அட்டில் கண்டனள் பெயர
வையெரி மூட்டிய ஐயை தன்னொடு

கையறி மடைமையின் காதலற்கு ஆக்கி” (29-34)

என்பது பாடல் பகுதி. கண்ணகியின் கைவிரல்கள் மெல்லியவாகலின், காய்கறி திருத்தியதால் சிவந்து விட்டன. இத்தகைய மெல்லிய விரல்களைப் பார்த்துத்தான்