பக்கம்:சிலம்போ சிலம்பு.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்போ சிலம்பு!

245


கண்ணகி தூய்மை செய்தது ஓரளவு பெண்ணடிமைக் கொள்கைதான். அது காலத்தின் கோலம். தூய்மை செய்த நீர் இருந்த பாண்டம் சுடுமண் மண்டை எனப்பட்டுள்ளது. மண்டை - பாண்டம் (பாத்திரம்), சுடுமண் மண்டை = சூளையில் சுட்டு உருவாக்கிய மண் பாண்டம். மண் பாண்டத்தால் தூய்மை செய்தாள் என்று சொல்லியிருப்பதில் உள்ள குறிப்பு, கண்ணகி தங்கள் வீட்டில் பொன்-வெள்ளிப் பாண்டங்களைப் பயன்படுத்தியிருப்பாள் என்பது. மாதரியின் வீட்டுப் பாண்டம் மண் பாண்டமே. சுடுமண் மண்டையின் தொழுதனள் மாற்றி என்பது சிறிது குழப்பமாயுள்ளது. இந்தப் பாண்டத்திலிருந்து நீர் எடுத்துக் கணவன் கால் அடிகளைத் தடவித் தூய்மை செய்தாள் என்றும் பொருள் கொள்ளலாம். கையால் தடவினால் தானே நீர் உண்ணுமிடத்தில் கீழே சிந்தாமல் இருக்கும்? அல்லது மற்றொரு விதமாகவும் பொருள் கொள்ளலாம். அதாவது: மண் பாண்டத்திற்கு மேலே கணவனின் கால்களை வைக்கச் செய்து நீர் ஊற்றி அந்த நீர் மண்பாண்டத்தில் விழும்படி மாற்றினாள் - என்பதுதான் இரண்டாவது பொருள். யான் ஒரு வீட்டில் மேசைப் பக்கத்தில் நாற்காலியில் அமர்ந்து சிற்றுண்டி உட்கொண்டபின், என் எதிரில் மேசை மேல் அகலமான ஒரு பித்தளைத் தட்டை வீட்டினர் வைத்தார்கள்; அதற்குமேலே என் கையை நீட்டச் சொல்லி நீர் ஊற்றினார்கள்; நான் கைகழுவிய நீர் பித்தளைத் தட்டில் விழுந்தது; பிறகு அதை எடுத்துக் கொண்டுபோய் விட்டார்கள். இந்தச் சொந்தப் பட்டறிவைக் கொண்டு, “சுடுமண் மண்டையில்... மாற்றி” என்பதற்கு மேலுள்ள இரண்டாவது பொருளை யான் கூறியுள்ளேன்.

உண்ணுமுன் கால்களைத் தூய்மை செய்துவிடும் செயலுக்கு, இலக்கிய ஒப்புமை காண்டல் என்னும் முறையில், கம்பராமாயணத்திலும் பெரிய புராணத்திலும் ஒத்துள்ள செயல்களை இவண் காணலாம்.